சபரிமலை யாத்திரைப் பலன்கள்

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்ற முதுமொழிக்கேற்ப கிடைத்தற்கரிய மனிதப் பிறவி எடுத்த நாம் இப்பூவுலகில் வாழ்க்கையின் பல்வேறுபட்ட கோணங்களில் ஆட்பட்டு இயங்கி வருகிறோம். உலகின் பல சூழல்களில் மாட்டிக்கொண்டு பிறவிப் பெருங்கடலில் எதிர் நீச்சல் போட்டுக் கடந்து கரையேற முயன்று வருகிறோம். உலகில் உள்ள மதங்களில் ஒவ்வொரு மதங்களும் தங்களுக்கென்று ஒரு விரதமும் கட்டுப்பாடும் வரையறுத்து வைத்திருக்கின்றன. குறிப்பாக இஸ்லாமியர்களாலும் கண்டிப்பாக இஸ்லாம் மதத்தில் நாற்பது நாள் ராம்ழான் நோன்பு என்பது எல்லா இஸ்லாமியர்களாலும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர்களுடைய புனித குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் கிறிஸ்த்துவ மதத்திலும் ஈஸ்டர் நோன்பு என்பது ஒவ்வொரு கிறிஸ்த்துவர்களும் மேற்கொள்ள வேண்டும் என்று புனித பைபிளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்து மதத்தில் எந்த விரதமும் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று எந்த இதிகாசத்திலும் கூறப்படவில்லை. இருந்தும் வாழ்வின் பல சிக்கல்களில் மாட்டிக் கொண்டு தினமும் அல்லல்பட்டு உழன்றுவரும் நாம் வருடத்திற்கு ஒரு முறையாவது சில நாட்களாவது தூய மனத்துடனும் மெய்யான பக்தியுடனும் நல்ல சிந்தையுடனும் மனதைக் கட்டுப்படுத்தி விரதங்களிருந்து பூஜைகள், அன்னதானங்களை இயன்றவரை சக்திக்கேற்ப செய்ய நாமாக மேற்கொள்ளும் இந்த சபரிமலை யாத்திரை நோன்பு நமக்கு ஒரு நல்ல வாய்ப்பினைத் தருகிறது.

எருமேலி மார்க்கத்தில் சபரிமலை யாத்திரை செல்வதில் மற்றொரு விசேஷம் உடல் நலம் காக்கும் மூலிகைகளின் மணம் தாங்கி வரும் காற்;றைச் சுவாசிக்கும்பேறு கிடைத்தற்கரிய ஒன்றாகும். ஆயுர்வேத சாஸ்த்திரப்படி மனித தேகத்தில் வாத, பித்த கபதாதுக்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட அளவு வரையில் இருந்தால் தேகத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும். அதிகமாகவோ, குறைவாகவோ ஆனால் வியாதிகள் உடலைத் தீண்டுகின்றன. இம்மூன்றின் தொல்லைகளைக் குணப்படுத்தும் மூலிகைகளை; எருமேலியிலிருந்து சபரிமலை வரையிலும் அதற்கப்பாலும் மண்டிக் கிடக்கின்றன.

வாதரோகத்தை அடக்குவதற்கு கருங்குறிஞ்சி மூலிகை உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. எருமேலியிலுந்து கல்லிடும் குன்று வரையில் முக்கியமாக அழுதா நதிப் பிரதேசத்தில் இம்மூலிகைகள் நிறைந்து இருக்கின்றன. கபரோகத்தைத் தீர்க்கும் மூலிகைகள் கல்லிடும் குன்றிலிருந்து கரிமலை ஆறாவது தட்டுவரை வளர்ந்து இருக்கின்றன. அங்கிருந்து புல்மேடுவரை உள்ள சபரிமலைப் பிரதேசத்தில் பித்தரோக சமனியான மூலிகைகள் மண்டிக் கிடக்கின்றன. இம்மூன்று பிரதேசங்களிலும் தங்கிச் செல்பவர்கள் மேற்படி மூலிகைகளில் மணம் நிறைந்த காற்றைச் சுவாசிப்பதாலும், மூலிகைவளம் செறிந்த நீரை அருந்துவதாலும், மூலிகைகளை எரித்த சாம்பலைத் தரிப்பதாலும் ரோகங்கள் நீங்கி நல்ல ஆரோக்கியம் அடைகிறார்கள்.

சமவெளிப் பிரதேசமாகிய வயல் சூழ்ந்த தமிழ்நாட்டில் வாழும் நமக்கு படிகள் இல்லாத மலை ஏறும் வாய்ப்பு அதிகமாக கிடைப்பதில்லை. ஆண்டுக்கொரு முறையாவது சபரிமலைக்கு எருமேலியிலிருந்து நடந்து பெருவழிப்பாதையாக சபரிமலை சென்றுவரும் பக்தர்களுக்கு மலையேறும் நல்வாய்ப்புக் கிடைப்பதனால் அவர்களின் இதயம் பலம் பெறுகிறது. இரத்தம் சுத்தமடைகிறது. நரம்புகளும், தசை நார்களும் உறுதி பெறுகின்றன. கெட்ட உணர்வுகள் பட்டுப்போகின்றன.

சபரிமலை யாத்திரையின்போது சாதி சமய வேறுபாடுகள் சரணம் போட்டுப் பறக்கின்றன. ஏழை, பணக்காரர் என்ற பேதம் இல்லை. உயர்ந்தவர், தாழ்ந்தவர், படித்தவர், பாமரர் என்ற வித்தியாசம் இல்லை. எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிரை என்ற உணர்வோடும், அன்போடும், பண்போடும் மேற்கொள்கின்ற யாத்திரையே இந்த சபரிமலைப் புனித யாத்திரை. ஐயப்பனும் வாபர் சுவாமியும் இரண்டறக் கலந்து நின்று அருள் புரிவதைப் போலவே இஸ்லாம் மதத்தாரும் மாலை அணிந்து இருமுடிதாங்கி ஐயப்பசுவாமி கோயிலுக்குப் பெரும் திரளாக வந்திருந்து வழிபட்டு அருள் பெறுகிறார்கள். இதனால் இந்து, இஸ்லாம் இன ஒற்றுமை ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரோடி வளர்கின்றது. எனவே இந்த யாத்திரையின்மூலம் ஒருமைப்பாட்டு உணர்வு வளர்கின்றது. சாதி, சமய வேறுபாடுகள் வேரறுக்கப்படுகின்றன. சமத்துவம் என்பது நடைமுறையில் நடாத்திக் காட்டப்படுகிறது. நல்லவைகளையே செய்து நல்லவைகளையே நினைத்து சுவாமியே சரணம் ஐயப்பா என்ற தாரக மந்திர சக்தியுடன் பக்தர் பெருவெள்ளம் பரம்பொருளை உணர்ந்து கொள்ளத் துடிக்கும் ஓர் அறப்போர்க்களமே ஐயப்ப சுவாமியின் சபரிமலை யாத்திரை என்றால் மிகையாகாது.

இந்த யாத்திரையின்போது வாழ்வின் பல்வேறு துறையிலிருப்பவர்களும், பலவிடங்களில வசிப்பவர்களும், பல திறத்தவரும், பல குணத்தவரும், ஓரிடத்தில் வந்து ஒன்று கூடுகின்றார்கள். ஒருவரோடொருவர் மனம் விட்டு பேசிப் பழகுகிறார்கள். இதன் பயனாக கூச்ச மனப்பான்மையுள்ளவர்களுக்கு மனக்கூச்சம் விலகி மனத்தெளிவு பிறக்கிறது. மனப்பயம் நீங்கி தைரியமும் மன உறுதியும் ஏற்படுகின்றன. தாழ்வு மனப்பான்மையுள்ளவர்கள் உயர்வுள்ளம் பெறுகிறார்கள். எல்லோரையும் போலவே நாமும் நம்மை போலவே எல்லோரும் என்ற உணர்ந்து உறுதி பெறுகின்றார்கள்.

புண்ணியம் நல்கும் சபரியாத்திரை

உலகெங்கும் உள்ள ஐயப்ப பக்தர்கள் தங்கள் தேசத்திலிருந்து புறப்பட்டு எருமேலி என்ற இடத்தில் வந்து கூடுவார்கள். பக்தர்களின் கணக்கற்ற வருகை எருமேலி இன்று ஜன நெரிசல் நிறைந்த இடமாக மாறியுள்ளது. இங்கு ஒரு சாஸ்தா ஆலயம் உண்டு ஆலயத்திலிருந்து சுமார் 1 /2 மைல் வடகிழக்கில் எருமேலி பேட்டைக் களமாகும். இங்கு ஐயன் ஐயப்பனின் அருமை நண்பரான வாவரின் ஆலயமும் பேட்டை சாஸ்தாவின் பிரதிஷ்டையுள்ள சிறுகோயிலும் உண்டு. இந்த ஆலயங்களைச் சுற்றி அநேகம் முஸ்லீம் அன்பர்கள் குடியிருக்கிறார்கள். மார்கழி மாதத்தில் வாவர் ஆலயத்தில் கொடியேற்றப்படும்.

எருமேலி

எருமேலிப் பேட்டை ஆடுதல் சபரிமலை யாத்திரையில் முக்கியமான அம்சமாகும். இங்கு இந்துக்களும், முஸ்லீம்களும் ஒரு தாய் மக்கள் போல் சகோதர பாசத்துடன் பழகுவதைக் காணலாம். ஜனசந்தடி நிரம்பப்பெற்ற எருமேலி கடைவீதியின் நடுமையத்தில் வாவர் ஆலயம் அமையப்பெற்றுள்ளது. ஹரிஹர புத்திரரான ஸ்ரீ தர்மசாஸ்தா வேடனைப்போல் வில்லும் அம்பும் தரித்த நிலையில் நிற்கும் தோற்றத்தில் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் இங்கு தாவளம் போடாமல் செல்ல மாட்டார்கள்.

ஒவ்வொரு ஐயப்ப பக்தர்களும் பாகுபாடின்றி வண்ணப்பொடிகள் பூசி வாவரை வணங்கி, பேட்டை துள்ளி பின் குளித்து ஐயனை வழிபட்டு இருமுடிக்கட்டு தலையில் ஏற்றியவாறு சுவாமியே சரணம் ஐயப்பா என்ற சரணகோஷத்துடன் இங்கிருந்து அடர்ந்த காட்டில் பெருவழிப் பயணம் ஆரம்பமாகின்றது.

பேரூர்த்தோடு

இது மிகவும் புராதனமான முக்கியத்துவம் வாய்ந்த வாய்க்காலாகும். கிழக்கு முகமாக நாம் துவங்கிய வனயாத்திரையில் இளைப்பாற சிறந்த இடம் இந்தப் பேரூர்த்தோடாகும். எருமேலியிலிருந்து இரண்டு மைல் தூரமுள்ள இந்தப் பேரூர்த்தோடு கானகத்தையும், கிராமத்தையும் பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளது. வனயாத்திரையில் ஸ்ரீதர்ம சாஸ்தா இந்த பேரூர்த்தோடில் குளித்து இளைப்பாறியதாகக் கூறப்படுகின்றது. யாத்திரை மேற்கொண்டுள்ள ஐயப்பன்மார் இத்தோடில் குளித்து மலர், அரிசிப்பொரி இவற்றை வாய்க்காலில் உள்ள மீன்களுக்கு தூவி தமது பக்தியை வெளிப்படுத்துவர். இந்த இடத்திலிருந்து அரசாங்கத்தின் விலையுயர்ந்த தேக்கு தோட்டம் ஆரம்பமாகும். பேரூர்த்தோடை அடையும் இடம் வரை உள்ள ஸ்தலத்திற்கு கோட்டைப்படி என்று பெயர்.

கோட்டைப்படி

கோட்டைப்படியைக் கடந்தால் அங்கிருந்து தொடங்கும் இடம் ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் பூங்காவனம் என்றழைக்கப்படும். ஆகையால் அங்கு இரண்டு இலைகளைப் பறித்து வழிபாடு செய்த பிறகுதான் கடந்து செல்ல வேண்டும். கோட்டைப்படி என்பது கோஷ்டஸ்தானம் என்ற அர்த்தத்திலிருந்து இந்த கோட்டைப்படி என்ற சொல் தோன்றியுள்ளது.

காளைகெட்டி

கோட்டைப்படி கடந்தால் அடுத்த முக்கிய இடம் காளைகெட்டியாகும். எருமேலியிலிருந்து சுமார் 8 மைல் தொலைவிலுள்ளது இந்தக் காளைகெட்டி என்ற இடமாகும். காளைகெட்டி ஒரு அழகு மிகுந்த வனப்பிரதேசமாகும். இங்கு மஹிஷியை வதம் செய்த ஐயப்பன் அவளைத் தனது காலால் மர்த்தனம் செய்யும் காட்சியை காணவந்த கைலாயவாசன் தனது வாகனமான காளையை இந்த இடத்தில் கட்டியதால் இந்த இடத்திற்கு காளைகெட்டி என்ற பெயர் ஏற்பட்டதாய் கூறப்படுகின்றது.

அழுதாநதி

காளைகெட்டியில் இருந்து சுமார் ஒன்றரை மைல் கிழக்காக நடந்தால் அழுதாநதி என்ற இடத்தை அடையலாம். இந்த அழுதாநதி தொடர்ச்சியாகப்பாய்ந்து பம்பாநதியில் கலக்கின்றது. இந்த அழுதாநதியில் குளித்து மூழ்கும்போது நம் கையில் கிடைக்கும் சிறுகல்லை மடியில் கட்டிக் கொண்டு அதை மிகவும் கவனமாய் நாம் கல்லிடும் குன்று என்ற இடத்தில் போடவேண்டும்.

அழுதாமேடும் கல்லிடும் குன்றும்

அழுதையிலிருந்து நடக்க ஆரம்பிக்கும் ஐயப்பன்மார்களுக்கு இரண்டுமைல் செங்குத்தான மலையேற்றம் எதிர்படும். இதைத்தான் அழுதையேற்றம் என்று சொல்வார்கள். இதைவிட கடினமான ஏற்றம் வேறு ஏதுமில்லை என்று கூறவவேண்டும். பக்தர்களான வயோதிகர்களும், குழந்தைகளும் ஐயனின் கருணையினால் சிரமப்படாமல் ஏறுவது கண்கொள்ளாக் காட்சியாகும். ஒவ்வொருவருடைய இருதய சுத்தியையும், பாப சக்தியையும் அளக்கும் இடமாகும். ஐயப்ப பக்தர்கள் பயபக்தியுடன் கொண்டு வந்த கல்லை அழுதாமேட்டின் முடிவில் ஒரு பக்கமாக இருக்கும் கல்லிடும் குன்று என்ற இடத்தில் போட்டு வணங்க வேண்டும். அழுதா ஆற்றில் இருந்து தேவர்களால் எறியப்பட்ட கற்கள் மஹிஷியின் பூதவுடலை மறைத்த இடம் இது என்றும் அந்த குன்றை கல்லிடும் குன்று என்றழைத்து பயபக்தியுடன் வணங்குவார்கள்.

இஞ்சிப்பார கோட்டம்

அழுதை ஏற்றத்தின் கடினம் இந்த இடத்தை அடையும்போது எதிர்படும் சிறுவாய்க்காலுடன் முடிவடைகிறது. வாய்க்கால் என்றாலும் இங்கு தண்ணீர் கிடைப்பது மிகவும் கடினம். ஆயினும் இதை ஒரு இளைப்பாறும் கட்டமாக பக்தர்கள் கருதுகிறார்கள். இங்கு கோட்டைப்படி சாஸ்தாவை நினைத்து பூஜைகள் நிகழ்த்துவது வழக்கம்.

தாவளங்களையும் கோட்டைகளையும் பற்றிய விபரங்கள்

இஞ்சிப்பார கோட்டையில் இருந்து கிழக்காக நடந்தால் கரிமலை வரும் கரிமலை உச்சியும் ஒரு இளைப்பாறச் சிறந்த தாவளமாகும். ஆக மொத்தம் ஏழுகோட்டைகளும் அவற்றில் ஏழு தாவளங்களும், சபரிமலை யாத்திரீர்களின் இளைப்பாறும் கேந்திரங்களாகும். எருமேலி, கோட்டைப்படி, காளைகட்டி, இஞ்சிப்பார கோட்டைக் கோட்டை, உடும்பாரமலை, கரிமலைத் தோட்டம், கரிமலை உச்சி, பம்பையாற்றங்கரை, சன்னிதானம் போன்ற இடங்களில் மட்டும் தாவளங்களடித்து இளைப்பாற சிறந்த இடங்களாகத் தேர்ந்தெடுத்து உள்ளார்கள். மேற்கூறப்பட்டுள்ள கோட்டைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தேவதை உண்டு. ஆகையால்தான் ஒவ்வொரு கோட்டையைத் தாண்டும்போதும் கானகத்தில் நமக்கு துணை புரியும்.

கரிமலைத்தோடு தீரம்

கரிமலை ஏற்றம் ஏறுவதற்கு முன்பு ஆகாராதிகள் தயார் செய்யவும், சற்று இளைப்பாறவும் தகுதியுள்ள இடமாகும். இந்த கரிமலைத்தோடு தீரம். தங்குவதற்கு சற்று வசதிக்குறைவென்றாலும், தண்ணீர் தாராளமாகக் கிடைக்கின்றது என்பதால் பக்தர்கள் இங்கு கூடி சற்று இளைப்பாறுகின்றார்கள்.

கரிமலை ஏற்றம்

இளைப்பாறி முடிந்ததும் உடன் நடந்தால் செங்குத்தான கரிமலை ஏற்றம் தான். கரிமலை ஏற்றத்தைப் போன்ற கடினமான ஏற்றம் சபரிமலை யாத்திரையில் வேறு கிடையாது என்று பல பழமக்கார சுவாமிகள் கூறுவது வழக்கம். கரிமலை ஏற்றத்தைக் காட்டிலும் கரிமலை இறக்கம் மிகவும் கடினம். எவ்வளவு ஏற்றமோ அவ்வளவு இறக்கம் உண்டு. மரங்களின் வேர், பெரிய, சிறிய பாறைகள் இவற்றின் மீது அதிகவனமாக இறங்க வேண்டும். இந்த இறக்கம் இறங்கும்போது, பெரியானை வட்டம், சிறியானை வட்டம் என்ற இடங்கள் எதிர்ப்படும். இங்கு சிறு வாய்க்கால்களில் பளிங்கு போன்ற நீர் சலசலத்தோடும். யானைகள் கூட்டமாய் வந்து தாகம் தீர்த்துக் கொள்ளும் இடம் என்பதால் இருட்டு வேளைகளில் தனியாக இந்த இடத்தைக் கடக்க மாட்டார்கள். இந்த இடத்தை கடந்து சிறிய தூரம் சென்றால் பம்பாநதியைக் காணலாம்.

புண்ணிய பம்பாநதி

பம்பாஸ_கிஸ்தலம் புவனேகசுந்தரம் பந்தள ராஜனின் கமனீய மந்திரம், தஷிண கங்கையென்ற அடைமொழியுடன் கீர்த்தி பெற்றதும் ஐயப்பனின் ஜனனஸ்தானம் என்ற புகழும் இந்த பம்பா தீர்த்தத்திற்கு உண்டு.

அநேக வனமூலிகைகளின் சாறு கலந்து பாவங்களைக் கொல்லும் அபார சக்தியும் நிரம்பப்பெற்று ஸ்படிகத்திற்கு ஒப்பான நிறத்துடன் கரைபுரண்டோடும் பம்பையின் ஜலப்ரவாஹம் நமது இருதயத்தை ஆகர்ஷித்து நிர்மாலயத்தை ஏற்படுத்தும்.

பம்பாஸத்தியும் குருதட்சணையும்

கங்கை நதிக்கொப்பான புனித பம்பையில் நீராடி பாவங்களைந்து புனிதராய் ஐயப்பன்மார் தமது விரியில் குருசாமி எல்லோருடைய இருமுடிகளின் பின்முடிகளைப் பிரித்து அதிலிருந்து உணவுப்பொருட்களை எடுத்து உணவு தயாரிப்பார்கள். இதனை பம்பாஸத்தி என்று அழைப்பார்கள். இங்கு கன்னி ஐயப்பன்மார்களிடம் தட்டு கொடுத்து 108 அடுப்புகளில் இருந்து சாம்பல் எடுக்கப்பட்டு அதனை வஸ்திரகாயம் செய்து கொண்டு வரும்படி குருசாமி கூறுவார். இச்சாம்பலை பூஜையின்போது விபூதியாக உபயோகிப்பது வழக்கம். அதன்பின் இருமுடிகளை கட்டி ஒன்றாக வைத்து உணவுகளை இலையில் இருமுடிகளுக்கு முன்வைத்து நைவேத்தியம் செய்து பஜனை, பூஜைகள் செய்து முதலில் கன்னி ஐயப்பன்மார்களுக்கு அன்னதானம் செய்வார்கள். இந்த விருந்தில் சாஷாத் ஐயப்ப சுவாமியே கலந்து கொண்டு தங்களுடன் உணவருந்த வருவார் என்பது கருதப்படுகின்றது.

பம்பா விளக்கு

பம்பாஸத்தி முடிந்த மாலைநேரத்தில் பம்பா விளக்கினை சிறு மூங்கல், மெழுகுவர்த்திகள் கொண்டு அவரவர் கைவண்ணத்தில் தமது குழுவினராக தமது தோளில் சுமந்து சென்று பம்பா விளக்கே சரணமய்யப்பா என்று சரணகோஷத்துடன் பம்பையாற்றில் விடுவர்.

நீலிமலையும் அப்பாச்சிமேடும்
அப்பாச்சிக் குழியும்

பம்பையிலிருந்து புறப்பட வருவது நீலிமலையாகும். நீலிமலை சற்று கடினமாகவே இருக்கும் ஏனென்றால் அது மிகவும் செங்குத்தாக இருக்கும். மலை ஏற்றம் முடியும் இடத்திற்கு அப்பாச்சிமேடு என்று பெயர். அப்பாச்சிமேடு வந்தவுடன் இருபுறமும் உள்ள பள்ளத்தாக்கு பகுதிகளிற்கு வெல்லக்கட்டி இட்டு வணங்க வேண்டும் கடூரவனையும், துர்தேவதைகளையும் திருப்பதிப்படுத்த வேண்டி இச்சடங்குகள் நடத்தி வழிபாடு செய்வது வழக்கம்.

சபரிபீடம்

அப்பாச்சிமேட்டைக் கடந்து சற்று நடந்தால் இயற்கை அழகு நிறைந்த ஒரு சமநிலத்தைக் காணலாம். இந்த இடத்தில் இராமபிராணைக் காண பக்தை சபரி அமர்ந்து தவம் செய்தது. இச்சபரிபீடத்தில் விடல் தேங்காய் உடைத்து வழிபாடு செய்கிறார்கள் இந்த ஸ்ரீ சபரிபீடத்தை ஐந்தாவது கோட்டையாகக் கருதி வழிபடுகிறார்கள்.

சரங்குத்தி ஆல்

சபரிபீடத்திற்கடுத்தாக வருவது சரங்குத்தி ஆல். இங்கு கன்னி ஐயப்பன்மார் தங்களுடைய கன்னி யாத்திரையை உறுதி செய்து கொள்ளும் கட்டம் இதுதான். இந்த இடத்தில் தங்களுக்கு குருசாமியால் எருமேலிப்பேட்டையில் கொடுக்கப்பட்ட தங்களுடன் அதிஜாக்கிரதையாய் காட்டுவழித் துணையாய் கொண்டுவந்த சரத்தை அந்த சரங்குத்தி ஆல் என்ற இடத்தில் விடுக்க வேண்டும்.

சன்னிதானம்;

சபரிபீடத்தைத் தாண்டும்போதே சன்னிதானத்தின் மஹிமை பஞ்சேந்திரியங்களையும் தட்டி எழுப்பும். கோயிலின் நடையை நெருங்க உடல் களைப்பும் மறந்துபோகும். ஐயப்ப பக்தர்கள் தமது இருமுடியை கையினால் உறுதியாகப் பற்றிக்கொண்டு சரணகோஷத்துடன் பதினெட்டாம்படியில் உள்ள ஒவ்வொரு படிகளையும் வணங்கி ஏறி சன்னிதானத்தில் வந்து சேர்தல்.

நெய்யபிஷேகம்

சன்னிதானத்தில் ஐயன் தரிசனம் பெற்றபின் குருசாமி ஒவ்வொரு இருமுடிகளையும் பிரித்து அதிலிருந்து நெய்த்தேங்காயை எடுத்து உடைத்து அதிலிருந்து பெற்ற நெய்யினை பாத்திரத்தில் ஒன்றாக சேர்த்து ஐயனுக்கு நெய்யபிஷேகம் செய்தல்.

கற்பூர ஆழி

சன்னிதானத்தில் பலிக்கல்லின் அருகில் தரையில் கற்பூரம் எரிந்து கொண்டே இருக்கும் இதைத்தான் கற்பூர ஆழி என்று சொல்வார்கள். ஐயப்ப பக்தர்கள் தங்களுடன் கைவசம் தாராளமாய் வைத்திருக்கும் கற்ப+ரங்களை கற்பூர ஆழியில் இட்டு வணங்குவார்கள்.

மாளிகைப்புறமும் மலைநடை பகவதியும்

மாளிகைப்புறத்தம்மனின் சன்னதி சாஸ்தா ப்ரதிஷ்டைக்கு வடக்காக சற்று தூரத்தில் அமைந்துள்ளது. ஸ்ருஷ்டி, ஸ்துதி ஸம்ஹார காரிணியாக பராசக்தியாக விளங்கும் மாளிகைப்புறத்தமனைத் தரிசிப்பது என்பது சாதாரணமானதல்ல. ஆகையால் திரிசூலம், விளக்கு, போன்றவைகளில் ஆவஹித்து அம்மனை வழிபடுகின்றார்கள். இங்கு நடையில் பக்தர்கள் தேங்காய் உருட்டியும், மஞ்சள் பொடி தூவியும் அம்மனுக்கு ரவிக்கை துண்டு கொடுத்தும் வெடிவழிபாடு நடத்தியும் கும்பிடுவது வழக்கம்.
மற்றுமுள்ள சுவாமிகள்

சபரிமலை சன்னிதானத்தில் நாம் தரிசிக்க வேண்டிய கடுத்த சுவாமி, கருப்பண்ண சுவாமி, வாவர் சுவாமி என்ற மூன்று சுவாமி நடையுண்டு.

ஜோதி தரிசனம்

தைமாதம் ஒன்றாம் நாள் மாலை சபரிமலை சன்னதிக்கு எதிர்ப்புறம் உள்ள திசையில் உள்ள காந்தமலை உச்சியில் மாலை 6.30 மணிமுதல் 6.45 மணிவரைக்குள் ஹரிஹர சுதன் ஐயன் ஐயப்பா சுவாமி ஜோதி வடிவில் காட்சி அளிப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *