பார்,அதி சின்னப் பயல்.!

பாட்டுக்கொரு புலவன் சுப்பிரமணிய  பாரதியும் நாவலர் சோமசுந்தர பாரதியும் நெருங்கிய தோழர்கள். எட்டயபுரத்திலே பிறந்தவர்கள்,ஒரே தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் வாழ்ந்தவர்கள்.அன்பின் முதிர்ச்சியால் “சோமு” என்றும் “சுப்பு”  என்றும் அழைத்துக் கொள்வர். தமிழ் உணர்வு, அறிவு, ஆர்வம் முதலானவற்றில் ஒத்த இயல்பினர்.

  திருநெல்வேலியில் நெல்லையப்பன் கவிராயரது வீட்டில் தமிழ்ப் புலவர்கள்  கலந்துரையாடி மகிழ்வதுண்டு. அக் கூட்டத்தில் நாவலர் பாரதியாரும், தேசியக்கவி பாரதியாரும் கலந்துகொண்டு மகிழ்ச்சியுறுவர். சிற்சில சமயங்களில் புலவர்களிடையே சொற்போர் நிகழும்.அதிலும் இவர்கள் பங்கு பெறுவதுண்டு. அங்கு வந்தவர்களில் காந்திமதிநாத பிள்ளை என்பவரும் ஒருவர். தக்கதொரு தமிழ்ப்புலமையை  தந்தைவழி கொண்டவர்.

   ஒருமுறை இலக்கியக் களம் ஏற்றமுடன் நடந்து கொண்டிருந்த சமயத்தில்.இரு பாரதிகளும் அங்கு சென்றிருந்தனர். பலரும் கூடியிருந்த நேரத்தில் எல்லோரையும் விட வயதில் இளையவரான சுப்பிரமணிய பாரதியை ஏளனம் செய்து மடக்க நினைத்த காந்திமதிநாத பிள்ளை,” பாரதி சின்னப் பயல்” என்னும் ஈற்றடியைக் கொடுத்து,வெண்பாப் பாடி நிறைவு செய்யச் சொன்னார். உடனிருந்தவர்களுக்கு ‘என்ன நடக்கப்போகிறதோ’ என்ற தவிப்பு.

   ஆனால்,வரகவி சுப்பிரமணிய  பாரதியாரோ,சட்டென யாரும் எதிர்பாரா வண்ணம் ஒரு வெண்பாப் பாடி முடித்துவிட்டார்.பாடல் முழுவதும் நாவலர் பாரதிக்கு நினைவில் இல்லை.ஆனாலும் மூன்றாவது அடியின் இறுதி மட்டும் நினைவில் கொண்டிருந்தார்.

“……………………………காந்திமதி நாதனைப்

பார்,அதி சின்னப்பயல்.

என்று பாடினாராம்.

   தன்னை சின்னவயதினன்,அற்பமானவன் என்று எண்ணியிருந்த காந்திமதிநாத பிள்ளை தலை குனியும்படி பாடலைப் புனைந்து தான் யார் எனபதை நிரூபித்தார்.

(நாவலர் சோமசுந்தரனார் என்ற புத்தகத்திலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *