இலங்கை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் பூர்த்தியாகவுள்ள நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2015ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்துக் களமிறங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறுபான்மை சமூகங்களின் ஆதரவில் மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடித்து வெற்றிபெற்றார்.
அப்போது மைத்திரிபால சிறிசேனவுக்கு 6217162 வாக்குகளும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு 5768090 வாக்குகளும் கிடைத்தன. இதன்படி இவர்களது வாக்குவங்கி வீதம் முறையே 51.28 வீதம் மற்றும் 47.58 வீதம் எனும் நிலையில் அமைந்திருந்தன.
இதன்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களின் ஆதரவில் முன்னிலைபெற்று ஆட்சிபீடமேறினார்.
இதன்பின்னர் அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியதைப் போல நூறு நாள் வேலைத்திட்டத்தினை அறிமுகப்படுத்தி அவற்றில் பலவற்றை நிறைவேற்றினார்.
இதன்பின்னர் அதேயாண்டுஓகஸ்ட் மாதம் பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டு அதில் ஐக்கிய தேசியக் கட்சி கணிசமான ஆசனங்களைப் பெற்றபோதும் தனித்து ஆட்சியமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மையினைக் கைப்பற்றாத நிலை காணப்பட்டது.
இதில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினைச் சேர்ந்த தனக்கு ஆதரவான சக்திகளைத் திரட்டி ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை நிறுவினார். தேசிய அரசாங்கத்தின்மூலம் அரசியலமைப்புப் பேரவை உருவாக்கப்பட்டு 19ஆவது திருத்தச் சட்டமும் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி ஜனாதிபதி நான்கரை ஆண்டுகளுக்கு முன்னதாக நாடாளுமன்றைக் கலைக்க முடியாது என நிறைவெற்று ஜனாதிபதி முறைமைக்கு எதிரான ஒருசில சரத்துக்கள் முக்கியம்பெற்றன. ஆனாலும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியதைப் போல இதுவரை நிறவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படவில்லை.
இந்த நிறைவேற்று அதிகார சனாதிபதி முறைமையைப் பயன்படுத்தியே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் திடீரென்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார்.
அத்துடன் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஆலோசிக்காமலேயே அவரை பிரதமர் பதவியிலிருந்து தூக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவை நிடமித்தார். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றைக் கலைப்பதாகவும் வர்த்தமானி வெளியிட்டார்.
எனினும் 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி நாங்கரை ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றைக் கலைக்கமுடியாது என கூறப்பட்டதுடன் மஹிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவை சட்ட விரோதமானது என நீதிமன்றத் தீர்மானங்கள் வெளியாகின.
இதனையடுத்து மீண்டும் ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்படியான சூழ்நிலையில் இன்றுடன் நான்காவது ஆண்டை எட்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த ஆண்டுக்குள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியை நிலை நாடுவதாக நேற்று சூளுரைத்திருக்கின்றார்.
எவ்வாறாயினும் இந்த வருடம் தேர்தல்களால் சூடுபிடிக்கப்போகின்ற வருடமாக அமையும் என அரசியல் அவதானிகள் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.