இந்தியக் கடலோரக் காவல்படைதினம் பிப் 5

0
156

இந்தியாவின் படை சாராத கடல்வளங்களைப் பாதுகாக்கக் கடலோரப் காவல்படையை உருவாக்க வேண்டுமென இந்தியக் கடற்படை முன்மொழிந்தது. 1960ம் ஆண்டுகளில் கடல் வழியே பல கடத்தல் பொருட்கள் இந்தியாவுக்கு அதிகளவில் வந்தன, இவை உள்நாட்டு பொருளாதாரத்தைப் பாதிக்கும் என சுங்கத்துறை அஞ்சியது. இவற்றைத் தடுக்க சுங்கத்துறை கடற்படையின் உதவியை அடிக்கடி நாடியது. கடல் பகுதிகளில் ரோந்து சுற்றி கடத்தல் படகுகளை வழிமறிக்க வேண்டியது. 1971ம் ஆண்டு இந்த சிக்கலைப் பற்றி ஆராய நாக் சவுத்திரி ஆணையம் உருவாக்கப்பட்டது, இதில் கடற்படையும் வான்படையும் பங்குபெற்றன.

1971ல் இந்த ஆணையம் இந்தியாவின் நீண்ட கடற்கரையை ரோந்து சுற்றி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் மீன் பிடி படகுகளைப் பதிவு செய்யவேண்டும் என்றும் சட்ட விரோதப் படகுகளை வழிமறிக்க அனைத்து வசதிகளையும் உடைய படை அணியை உருவாக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. மேலும் கருவிகளின் தன்மை, அவற்றின் எண்ணிக்கை, உட்கட்டமைப்பு, பணி செய்ய தேவையான ஆட்கள் போன்றவற்றைப் பரிந்துரைத்தது.

1973ல் இந்தியா புதிய படையணிக்குக் கருவிகளை கொள்வன செய்யும் திட்டத்தைத் தொடங்கியது. இந்தியக் கடற்படையில் இருந்து ஆட்களைத் தற்காலிக அடிப்படையில் பெற்றது. தன் ஆட்கள் முதன்மைப் பணியை விட்டு விலகி வேலை செய்வதனால் தன் நோக்கம் பாதிப்படையும் என்று கடற்படை கருதியது. இதைத் தொடர்ந்து கடற்படை தலைமை அதிகாரி பாதுகாப்புத் துறை செயலருக்குக் கடிதம் எழுதினார். அதைப் பெற்றுக்கொண்ட பாதுகாப்புத் துறைச் செயலர் அமைச்சரவைச் செயலருக்கு ஆகத்து 31, 1974 ல் கடிதம் எழுதி கடலோரக் காவல்படை அவசியம் என வலியுறுத்தினார்.

1974 செப்டம்பர் மாதம் ருசுடமஜி ஆணையம் அமைக்கப்பட்டது. இது பாதுகாப்பு மற்றும் சட்டத்தை நடைமுறைபடுத்துவதில் கடற்படை மற்றும் காவல் துறைகளின் செயல்பாடுகளில் உள்ள ஓட்டைகளை ஆராய்ந்தது. பாம்பே ஹை யில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வளம் காரணமாக கடல்சார்ந்த சட்ட நடைமுறைபடுத்துதல் மற்றும் பாதுகாப்புத் தொடர்பாக பணியாற்றும் தனி அமைப்பு உருவாவதன் அவசியம் அதிகரித்தது. இந்த ஆணையம் தன் பரிந்துரையாகக் கடலோரக் காவல் படை பாதுகாப்புத் துறையின் கீழ் உருவாக்கப்படவேண்டும் என்று 1975 சூலை தெரிவித்தது. ஆனால் அமைச்சரவைச் செயலாளர் உள்துறையின் கீழ் கடலோரக் காவல்படை உருவாக்கப்படவேண்டும் என பரிந்துரைத்தார். அதை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மறுத்து பாதுகாப்புத் துறையின் கீழ் உருவாக்கப்படும் என அறிவித்தார்.

1977 பிப்ரவரி 1, அன்று கடலோரக் காவல்படை, கடற்படையிடம் இருந்து பெறப்பட்ட 5 ரோந்துப் படகுகள் மற்றும் 2 பீரங்கிப் படை கப்பல் வரிசைகளைக் கொண்டு செயல்படத் தொடங்கியது. ஆகத்து 18, 1978ல் இதன் பணிகளை வரையறை செய்து கடலோரக் காவல் படை சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அடுத்த நாளில் இருந்து இப்படைப்பிரிவு முறையாக நடைமுறைக்கு வந்தது. கடற்படையின் துணை அட்மிரல் வி. எ. காமத் இதன் முதல் தலைவராக இருந்தார்.

கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான கப்பல்களில் Indian Coast Guard Ship (ICGS) என்று எழுதப்பட்டிருக்கும்.

இதில் 86 கப்பல்கள் தற்போது பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதில் கரையோர ரோந்துப் படகுகள் 13, இடைமறிக்கும் படகுகள் 12, வேக ரோந்துப் படகுகள் 11, ஆழ்கடல் ரோந்துப் படகுகள் 11, மாசு கட்டுப்பட்டுக் கப்பல் 1, நவீன ஆழ்கடல் ரோந்துப் படகுகள் 7 ஆகியவை அவற்றில் சிலவாகும். மேலும் 80 படகுகளை வாங்க கொள்முதல் ஆணை பிரப்பித்துள்ளார்கள். அவற்றில் பல கட்டுமான நிலையில் உள்ளன. இடைமறிக்கும் படகுகள் 36, வேக ரோந்துப் படகுகள் 20 ஆகியவை அவற்றில் சிலவாகும்.

டோர்னியர் டு 228 வகை வானூர்திகள் 20 தற்போது பயன்பாட்டில் உள்ளன. 18 கட்டப்பட்டுக்கொண்டுள்ளன. இவ்வகை வானூர்திகள் போக்குவரத்து, ரோந்து, தேடுதல் & மீட்பு போன்ற பணிகளுக்குப் பயன்படுகிறது. பல்பயன் உலங்கு வானூர்திகள் 21 பயன்பாட்டில் உள்ளன. தாக்குதல் உலங்கு வானூர்திகள் 5 பயன்பாட்டில் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here