காமன்வெல்த் விளையாட்டின் கதை

0
173

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள கோல்ட் கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகின்றன. உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழா என்று ஒலிம்பிக்கைச் சொல்வதுண்டு. அதேபோல காமன்வெல்த் விளையாட்டும் பெரிய விளையாட்டுத் திருவிழாதான். ஒலிம்பிக்போலவே நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுக்கு நீண்ட வரலாறு உள்ளது

நல்லெண்ணத்துக்கான போட்டி

பிரிட்டிஷ் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் அனைத்துக் கண்டங்களிலுமே காலனி நாடுகள் இருந்தன. இந்த நாடுகளுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்ற எண்ணம் பிரிட்டிஷ் பேரரசுக்கு உதயமானது. இதை முதன்முதலில் வெளிப்படுத்தியவர் ஆஸ்லே கூப்பர்.

1891-ல் பிரிட்டிஷ் பத்திரிகையில் இது பற்றி அவர் எழுதினார். “பிரிட்டிஷ் பேரரசைப் பற்றி நல்ல புரிதலையும் நல்லெண்ணத்தையும் ஏற்படுத்தும் விதமாக பிரிட்டிஷ் பேரரசு நாடுகளுக்கு இடையே போட்டிகளை நடத்தி, அதை விழாவாகக் கொண்டாட வேண்டும்” என்று அதில் குறிப்பிட்டார்.

ஆனால், இந்த எண்ணத்துக்கு 20 ஆண்டுகள் கழித்துத்தான் செயல்வடிவம் கிடைத்தது. 1911-ல் பிரிட்டிஷ் பேரரசின் அரசராக ஐந்தாம் ஜார்ஜ் பொறுப்பேற்றார். அவருடைய முடிசூட்டு விழாவையொட்டி விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பிரிட்டிஷ் தவிர்த்து கனடா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

நான்கு பிரிவுகளில் மட்டுமே இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் கனடா வெற்றிப் பெற்றது. இந்த விளையாட்டுதான் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிள்ளையார்சுழி போட்டது.

இந்த விளையாட்டுத் தொடர் முடிந்த பிறகு பிரிட்டிஷ் பேரரசு நாடுகளிடையே விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது பற்றி எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆனால், அதே காலகட்டத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நன்கு முன்னேற்றம் அடைந்திருந்தன. இதைத் தொடர்ந்து மீண்டும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தும் யோசனைகள் தீவிரமடைந்தன.

இறுதியாக 1930-ல் பிரிட்டிஷ் அரசு தன் காலனி நாடுகளுடன் இணைந்து விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கியது. இதற்கு ‘பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜிய’ விளையாட்டு என்று பெயர் சூட்டினர். இந்தப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதன்பிறகு 4 ஆண்டுகள் இடைவெளியில் போட்டிகள் தொடர்ந்தன. ஆனால், 1940-க்குப் பிறகு பல காலனி நாடுகள் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் பிடியிலிருந்து விடுதலைப் பெற்றன.

அரசியலால் பெயர் மாற்றம்

ஆனாலும், விளையாட்டுப் போட்டிக்கும் பங்கம் வராமல், 1950-ம் ஆண்டுவரை ‘பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம்’ என்ற பெயரில் விளையாட்டுப் போட்டிகள் தொடர்ந்தன. 1949-ல் பிரிட்டிஷ் பேரரசின் நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்காக காமன்வெல்த் அமைப்பு விரிவுபடுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து 1954-ல் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு ‘பிரிட்டிஷ் பேரரசு மற்றும் காமன்வெல்த் விளையாட்டு’ என்ற பெயர் மாறியது. ஆனால், அதன் பிறகு 1966 முதல் 1974 வரை இந்த விளையாட்டுப் போட்டிகள் ‘பிரிட்டிஷ் காமன்வெல்த் விளையாட்டு’ என்று பெயர் மாற்றம் பெற்றது. உலக அரசியலில் தொடர்ந்து ஏற்பட்டுவந்த மாற்றம் காரணமாக, ஒரு கட்டத்தில் பிரிட்டிஷ் என்ற பெயர் பின்னுக்குத் தள்ளப்பட்டு ‘காமன்வெல்த்’ என்ற பெயர் மட்டுமே நிலைபெற்றது.

அதன் வெளிப்பாடாக 1978 முதல் ‘காமன்வெல்த்’ என்ற பெயரிலேயே விளையாட்டுப் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகின்றன.

இந்தப் போட்டிகள் காமன்வெல்த் உறுப்பு நாடுகளில் ஏதாவது ஒன்றில் நடைபெறுவது வழக்கம். எந்த நாட்டில் விளையாட்டுப் போட்டிகள் நடந்தாலும், பிரிட்டிஷ் மகாராணிதான் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான ஜோதியை ஏற்றி வழி அனுப்பிவைப்பார். அந்த ஜோதி காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினராகவுள்ள நாடுகளுக்குச் சென்று கடைசியாக விளையாட்டு நடைபெறும் நாட்டுக்கு வரும்.

காமன்வெல்த் அமைப்பில் தற்போது 53 நாடுகள் உறுப்பினராக உள்ளன. ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் ஏப்ரல் 4 முதல் 15 வரை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 71 நாடுகள் பங்கேற்றுள்ளன. காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினராக உள்ள 53 நாடுகளைத் தவிர பிரிட்டன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளும் இந்தப் போட்டிகளில் பங்கேற்றுள்ளன. எனவே, பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கையும் தற்போது கூடியிருக்கிறது.

மனதில் நிற்கும் தருணங்கள்

# காமன்வெல்த் போட்டிகளில் பதக்கப் பட்டியலில் அதிக முறை முதலிடம் பிடித்த நாடு ஆஸ்திரேலியா. 10 முறை பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இங்கிலாந்து 8 முறையும், கனடா, இந்தியா தலா ஒரு முறையும் முதலிடம் பிடித்துள்ளன.

# டெல்லியில் 2010-ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் முதலிடத்தைப் பிடித்தது. இதைத் தவிர 2002, 2006-ல் 4-வது இடத்தையும், 1990, 2014-ல் 5-வது இடத்தையும் பிடித்தது. இந்தியாவின் மிகச் சிறப்பான வெற்றிகள் இவை.

# காமன்வெல்த் போட்டியில் முதல் பதக்கம் வென்ற இந்தியர் ரஷித் அன்வர். ஆண்டு 1934. மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

# 1930 முதல் 1994வரை தனி நபர்கள் பங்கேற்கும்படியான போட்டிகளே நடைபெற்றன. இதன் பிறகுதான் ஹாக்கி, ரக்பி போன்ற குழு விளையாட்டுகள் சேர்க்கப்பட்டன.

# அதிகாரபூர்வமாக 1930-ல் நடைபெற்ற போட்டியில் 11 நாடுகளே பங்கேற்றன. 6 பிரிவுகளில் மட்டுமே விளையாட்டுகள் நடைபெற்றன. 400 பேர் மட்டுமே பங்கேற்றார்கள். தற்போது நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் 71 நாடுகள் பங்கேற்கின்றன. 19 பிரிவுகளில் 275 விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here