தூங்காத விழிகள்

வேலை நாட்களில் சீக்கிரம் விழித்து, விடுமுறை நாட்களில் தாமதமாக விழிப்பவரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கு, ‘சோசியல் ஜெட்லாக்’ இருப்பதற்கான சாத்தியம் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சோசியல் ஜெட்லாக் என்றால் என்ன?

இரு வேறு நேர மண்டலங்களில் பயணம் செல்லும்போது ஏற்படும் ஜெட்லாக்கைப் போன்றதுதான் இதுவும். ஆனால், சோசியல் ஜெட்லாக்கில் இருக்கும் இரண்டு நேர மண்டலங்களும் சற்று மாறுபட்டவை. முதலாவது பணியும் சமூகமும் சார்ந்த கடமைகளால் உருவாக்கப்பட்ட நேர மண்டலம். இரண்டாவது உடம்பின் உள் கடிகாரத்தால் ஏற்படுத்தப்பட்ட நேர மண்டலம்.

நமது உடம்பு இந்த இரண்டு நேர மண்டலங்களின் முரண்களில் சிக்கிக்கொள்ளும்போது, இந்த சோசியல் ஜெட்லாக் ஏற்படுகிறது. உலகில் மூன்றில் இருவருக்குக் குறைந்தது வாரத்துக்கு ஒரு மணி நேரம் சோசியல் ஜெட்லாக் ஏற்படுகிறது. ஏனையோருக்கு வாரத்துக்கு இரண்டு மணிநேரமோ அதற்குக் கூடுதலாகவோ இது ஏற்படுகிறது. ஆந்தையைப் போன்று நேரம் கழித்துப் படுத்து, நேரம் கழித்து விழிப்பவர்களுக்கு சோசியல் ஜெட்லாக் அதிகமாக இருக்கும். சோசியல் ஜெட்லாக்கும் தூக்கக் குறைபாடும் நடைமுறையில் பிரிக்க முடியாத இரட்டையர்கள்.

உடலின் கடிகாரம்

நேரம் பார்த்து நாம் மட்டும் வேலை செய்வதில்லை. உடலில் உள்ள உறுப்புகளும் நேரம் பார்த்துத்தான் வேலை செய்கின்றன. நமது உடலின் அனைத்து செல்களிலும் சிர்காடியன் கடிகாரம் உள்ளது. அந்தக் கடிகாரம் காட்டும் நேரத்தின்படியே நமது உடம்பினுள் அனைத்து வேலைகளும் நடைபெறுகின்றன. நமது உடலில் எப்போது ஹார்மோன்களைச் சுரக்க வேண்டும், நோய் எதிர்ப்பு செல்கள் எப்போது வேலை செய்ய வேண்டும், உடலின் வெப்பநிலை எவ்வளவு இருக்க வேண்டும், பகலிலும் இரவிலும் நமது மனநிலை எவ்வாறு இருக்க வேண்டும் என்பன போன்றவற்றையும் இந்த சிர்காடியன் கடிகாரமே தீர்மானிக்கிறது. இந்தக் கடிகாரங்களும் 24 மணிநேரத்தையே பின்பற்றுகின்றன. ஆனால், ஆந்தை போல்வ பகலில் தூங்கி இரவில் கண் விழித்திருப்போருக்கு இந்தக் கடிகாரம் கொஞ்சம் மெதுவாக ஓடும்.

பாதிப்புகள்

நாம் விழிக்கும் நேரத்தைப் பொறுத்தோ மாறுபட்ட நேர மண்டலத்தில் பயணம் செல்வதைப் பொறுத்தோ நாம் சூரிய ஒளியை எதிர்கொள்ளும் நேரம் மாறுபட்டால், அதற்கு ஏற்றவாறு நமது உடலின் உறுப்புகளும் திசுக்களும் தங்களது கடிகார நேரத்தை மாற்றிக்கொள்ளும். ஒளியை எதிர்கொள்ளும் நேரம் அடிக்கடி மாறினால், சூரியக் கடிகாரத்துடனான நமது உடல் கடிகாரத்தின் ஒத்திசைவு குலைந்துவிடும். இந்த ஒத்திசைவுக் குலைவு நமது உடலின் செயல்பாட்டைக் கட்டுப்பாடு அற்றதாக மாற்றிவிடுகிறது.

சோஷியல் ஜெட்லாக்கால், நமது பணித்திறன் பாதிப்படைகிறது, அன்றாட வாழ்வு பாதிப்படைகிறது. நினைவாற்றல் பாதிக்கப்படுகிறது, கை – கண் ஒருங்கிணைப்பு பாதிப்படைகிறது. தர்க்க அறிவு பாதிப்படைகிறது. உணர்வின் சமநிலை பாதிப்படைகிறது. தூக்கத்தின் ஆழமும் குறைகிறது. மேலும், நீரழிவு நோய் வகை- 2, உடல் பருமன், இதய நோய், மனச் சோர்வு போன்றவையும் சோசியல் ஜெட்லாக்கால் ஏற்படுகின்றன.

தவிர்க்கும் வழிமுறைகள்

சூரியனைப் பார்ப்பதே இன்று அபூர்வமாகிவிட்டது. இன்றைய வேலை பெரும்பாலும் அலுவலகத்துக்குள், அதீத ஒளி உமிழும் விளக்குகளின் கீழ் கழிந்துவிடுகிறது. இதனால், நமது உடலின் கடிகாரம், இந்தச் செயற்கை ஒளிக்குத் தன்னைப் பழக்கிக்கொள்கிறது. எனவே, இரவில் தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாகவே, வீட்டில் அதிக ஒளியில் ஒளிரும் விளக்குகளை அணைத்துவிட்டு, மேஜை விளக்குகளைப் பயன்படுத்துவது நல்லது. இரவு நேரத்தில் நமது கைபேசியின் ஒளிர்வையும் கணினித்திரையின் ஒளிர்வையும் குறைத்து வைப்பது நல்லது,

இரவு தூங்க நேரமாகிவிட்டால், காலையில் நேரம் கழித்து எழுவதன்மூலம், போதுமான தூக்கத்தைப் பெற முடியும். ஆனால், அந்தத் தூக்கம் முறையான தூக்கம் அல்ல என்பதை நாம் உணர வேண்டும். வார நாட்களில் தொலைத்த தூக்கத்தை விடுமுறை நாட்களில், அதிக நேரம் தூங்கிப் பெற முயன்றால், நமக்கு ஆழ்ந்த தூக்கமும் வராது. உடலுக்கும் மனத்துக்கும் ஓய்வும் கிடைக்காது. தினமும் குறித்த நேரத்தில் தூங்கி, குறித்த நேரத்தில் எழுவதை அன்றாடப் பழக்கமாக்கினால், உடலும் மனதும் மட்டுமல்ல; நம் வாழ்வும் நலமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *