ஆசைப் பத்து

(திருப்பெருந்துறையில் அருளியது)

இறைவன் திருவடியை அடைய அவாவுற்றமையை அருளிச் செய்த பதிகம்.

ஆத்தும இலக்கணம்

ஆன்மாவின் சொரூப இலக்கணம். அஃதாவது, இறைவனை அடைய விரும்புவதே ஆன்மாவின் இயற்கை என்பதைக் கூறுவதாம்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

25 ஆசைப் பத்து

*பாடல் 07*

பாரோர், விண்ணோர், பரவி ஏத்தும் பரனே! பரஞ்சோதி!
வாராய்; வாரா உலகம் தந்து, வந்து ஆட்கொள்வானே!
பேர் ஆயிரமும் பரவித் திரிந்து, `எம் பெருமான்’ என ஏத்த,
ஆரா அமுதே! ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!

பதப்பொருள் :* 🌷
அம்மானே – தலைவனே, பாரோர் – மண்ணுலகத் தாரும், விண்ணோர் – விண்ணுலகத்தாரும், பரவி ஏத்தும் – வணங்கித் துதிக்கின்ற, பரனே – மேலானவனே, பரஞ்சோதீ – மேலான ஒளிப்பொருளே, வந்து – பக்குவம் அடைந்தவர்கள் முன்னே தோன்றி, வாரா உலகம் தந்து – மீண்டு வருதல் இல்லாத முத்தியைக் கொடுத்து, ஆட்கொள்வோனே – ஆட்கொண்டருள்வோனே, ஆரா அமுதே – தெவிட்டாத அமுதமே, பேர் ஆயிரமும் – உன்னுடைய ஆயிரந் திருநாமங்களையும், பரவித் திரிந்து – துதித்துத் திரிந்து, எம்பெருமான் என ஏத்த – எம்பெருமானே என்று உன்னை வாழ்த்துவதற்கு, ஆசைப்பட்டேன் – விரும்பினேன், வாராய் – வந்து அருள்வாய்.
*விளக்கம் :*
ஒளிப்பொருள்கட்கும் ஒளியைத் தருபவனாதலின், ‘பரஞ்சோதீ’ என்றார். முத்தியுலகத்துக்குச் சென்றவர் மீண்டும் பிறவிக்கு வரமாட்டாராதலின், அதனை ‘வாரா உலகம்’ என்றார். பேராயிரமும் பரவித் திரிந்து எம்பெருமான் என ஏத்துதல், இறைவனுடைய உலகத்தில் என்க. இறைவன் இன்பம் அனுபவிக்குந்தோறும் புதிதாகவே தோன்றுமாதலின், ‘ஆரா அமுதே’ என்றார்.
இதனால், இறைவனது திருநாமங்கள் பலவற்றையும் பரவியேத்தும் இன்பம் கூறப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *