நிகழ்வுகளுக்கும் குறைவே இல்லை-நவராத்திரி ஸ்பெஷல் !

0
78

ஆயிரம் திருநாமங்களுடன் ஆயிரமாயிரம் திருக்கோலங்களில் தலங்கள்தோறும் அருளாட்சி செலுத்துகிறாள் அன்னை ஆதிபராசக்தி. அத்தனை தலங்களிலும் அம்பிகையின் அருளாடல்களுக்கும் அதிசய நிகழ்வுகளுக்கும் குறைவே இல்லை.

அம்பிகை காஞ்சி காமாட்சி

ஓர் அம்பிகைக்கு ஶ்ரீசக்கரமே தாடங்கங்களாக அழகு செய்கிறதென்றால், மற்றோர் அம்பிகையின் திருவடிகளில் கொலுசுகளின் இனிய ஒலி கீதம் பாடுகிறது.

மன்மதனிடம் மட்டுமா கரும்பு வில் இருக்கிறது? இதோ காஞ்சியின் அரசியும் கரும்பு வில் கொண்டு காட்சி தருகிறாள். மன்மதனின் கரும்பு வில் மோகத்தைத் தூண்டக்கூடியது என்றால், அம்பிகையின் கரத்தில் இருக்கும் கரும்பு வில்லோ நம் மோகம் அகற்றி, ஆன்மிகத்தில் உயர்நிலை அடையச் செய்கிறது.

மற்றுமோர் தலத்தில் அம்பிகை மேரு வடிவினளாய் காட்சி தருகிறாள்.

இப்படி தலங்கள்தோறும் அம்பிகையின் ஒவ்வோர் அம்சமும் ஓர் அற்புத உண்மையை, பக்தர்களின் வாழ்க்கையில் நிகழ்த்திய ஓர் அருளாடலை நமக்கு உணர்த்துகிறது. நவராத்திரியை முன்னிட்டு இங்கே அம்பிகைக்கே உரிய தனித்துவமான அடையாளங்களை தரிசிக்கலாம்.

திருமீயச்சூர் லலிதாம்பிகை கொலுசு

அழகே வடிவான ராஜகம்பீர மாதங்கி என்று போற்றி வழிபடப் பெறுபவள் திருமியச்சூர் லலிதாம்பிகை. ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் இந்த தேவியைப் போற்றித்தான் பாடப்பட்டது. அதைப்போலவே ஸ்ரீலலிதா நவரத்தின மாலை என்ற தமிழ்ப் பாமாலையும் இங்குதான் தோன்றியது. ஸ்ரீசக்ர பீடத்தில் தெற்கு நோக்கி சர்வ அலங்கார பூஷிதையாக ஸ்ரீஸ்ரீ லலிதாம்பிகை அமர்ந்திருக்கும் கோலம் கண்கொள்ளா காட்சி. ஒரு பக்தையின் கனவில் தோன்றிய லலிதாம்பிகை, தனக்கு கொலுசு செய்து வருமாறு கேட்டுக்கொண்டாள்.

அந்த பக்தையும் அதன்படியே கொலுசுகளை செய்து வந்து அர்ச்சகரிடம் கொடுத்து அம்பிகைக்கு அணிவிக்கச் சொல்லி இருக்கிறார். ஆனால், அர்ச்சகரோ கொலுசு அணிவிக்கும் விதமாக இந்த விக்கிரகம் வடிவமைக்கப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார். ஆனால், அந்த பக்தை அம்பிகை தன் கனவில் வந்து சொல்லியதால்தான் தான் கொலுசு செய்துகொண்டு வந்திருப்பதாகத் தெரிவித்தார். எனவே அம்பிகையின் சிலையை உற்றுப் பார்த்தபோது, அம்பிகையின் திருவடிகளில் இருந்த துளை தெரிந்தது.

அந்தத் துளையின் வழியாக லலிதாம்பிகையின் திருவடிகளில் கொலுசு அணிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து இந்த அன்னையிடம் வேண்டிக்கொள்கிறவர்கள் வேண்டுதல் நிறைவேறியதும் கொலுசு காணிக்கையை சமர்ப்பிக்கிறார்கள். உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் கொலுசு, அன்னை லலிதாம்பிகையின் அம்சமாகவே இங்கு உள்ளது.
மாங்காடு காமாட்சி மகாமேரு

தவசக்தியின் பெண்மை வடிவம் என்றே போற்றப்படுகிறாள் மாங்காடு காமாட்சி. ஈசனை எண்ணி தவமிருந்த காமாட்சி தேவியின் தவக்கோலம் அனலாக வெளிப்பட்டு அந்தப் பகுதியையே வாட்டி வந்தது. அந்த நேரத்தில்தான் அங்கு வந்தார் ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாள். காமாட்சி அன்னையின் தவ அனல் குறைவதற்காக சிவசக்தி அம்சமான மகாமேரு என்ற 43 திரிகோணங்கள் கொண்ட, ஸ்ரீசக்கரத்தை அங்கு பிரதிஷ்டை செய்தார்.

சக்தி வாய்ந்த இந்த மகாமேரு அபூர்வ மூலிகைகள் கொண்டு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்த மேருவுக்கு அபிஷேகம் கிடையாது. புனுகு, ஜவ்வாது, சந்தனம் உள்ளிட்டவை மட்டுமே சாத்தப்படுகிறது.

பின்னர் காமாட்சி அன்னையும் ஸ்ரீசக்ரமும் கொண்ட கோயிலை சோழ அரசர்கள் ஸ்ரீவித்யா முறைப்படி அமைத்தனர் என்கிறார்கள். சில காலம் முன்பு வரை கூட பக்தர்கள் இங்கு வந்து எண்ணியது நிறைவேறினால் ஸ்ரீசக்ர மேருவை புனுகுவால் மெழுகுகிறேன் என்று வேண்டிக்கொள்வார்களாம்.

தவசக்தியின் அடையாளமாக விளங்கும் மாங்காடு மகாமேரு காமாட்சி அன்னையின் சூட்சும வடிவமே.
கூத்தனூர் சரஸ்வதி வீணை

‘கற்றது கையளவு கல்லாதது உலகளவு’ என்பதை எடுத்துக்கூறவே கலைமகள் இன்னும் வீணை வாசிக்கும் திருக்கோலத்திலேயே வழிபடுகிறோம். வீணை கலையின் அடையாளம். கலைகளின் நாயகியான கலைமகள் கரங்களில் வீணை இருப்பது மிகவும் பொருத்தம்தான். சரஸ்வதி ஏந்தி இருக்கும் அந்த வீணை “கச்சபி” என்று அழைக்கப்படுகிறது. இசைப்பிரியரான சிவபெருமான் பிரம்ம தேவரின் வேண்டுதலுக்காக இந்த வீணையை பரிசாக அளித்தார்.

அந்த வீணையை கலைமகளுக்கு பிரம்ம தேவர் அளித்தார். ஓங்காரத்தின் வடிவான இந்த வீணை பிரம்ம தேவரின் படைப்புக்கான ஆதார ஸ்ருதியை அளிக்கக் கூடியது. கல்விக்கு அதிதெய்வமாகவும், கலைகளின் தேவியாகவும் உள்ள இந்த தேவி வீணை வாசிப்பில் மகிழ்ந்து அருள்புரியக் கூடியவள். ஆனால், வீணை இல்லாத சரஸ்வதியின் தோற்றம் அபூர்வம் எனலாம். கூத்தனூரில் குடியிருக்கும் சரஸ்வதி தன் கரங்களில் வீணையை ஏந்தியிருக்கிறாள்.

திருக்கண்டியூர், வேதாரண்யம், கங்கைகொண்ட சோழபுரம், திருக்கோடிக்கா போன்ற தலங்களில் வீணை இல்லாத சரஸ்வதியை “ஞான சரஸ்வதியாக” தரிசிக்கலாம். படைப்பின் ஆதார ஸ்ருதியாக விளங்கும் சரஸ்வதியின் வீணை வணங்க வேண்டிய ஒன்று.

கன்னியாகுமரி பகவதி அம்மன் மூக்குத்தி

சிவபெருமானை மணம் புரிய விரும்ப

ி இந்தத் தலத்தில் அன்னை தவமிருந்தாள். ஆனால், சிவன் வராமல் போகவே சினத்தில் இருந்த அன்னையை திருமணம் செய்து கொள்ளுமாறு பாணாசுரன் வற்புறுத்தினான். இதனால் மேலும் கோபமாகி அசுரனை அழித்தாள் அன்னை சக்தி.

தேவர்களின் வேண்டுதலால் சினம் தணிந்து, தனது கோப சக்தியை எல்லாம் ஒரு ஒற்றைக்கல் மூக்குத்தியில் இறக்கி சாந்தமானாள். குமரியாகவே அங்கு வீற்றிருந்ததால் “கன்னியாகுமரி” என்றே அன்னை பெயர் பெற்றாள். இந்த மூக்குத்தியின் ஒளியை கலங்கரை விளக்க ஒளி என்று எண்ணி வந்த கப்பல்கள் கரையில் மோதி விபத்துக்குள்ளானதாம்.

அதனாலேயே ஆலயத்தின் கடற்கரை நோக்கிய முன் கோபுர வாசல் மூடப்பட்டுள்ளது என்கிறார்கள். ஒளிமிக்க அன்னையின் மூக்குத்தி யோகசக்தியின் வெளிப்பாடு என்பதால் பக்தர்களின் வழிபாட்டுக்கு உரியதாக உள்ளது.

காசி அன்னபூரணி அட்சயப் பாத்திரம்

வற்றாத உணவினை அளிக்கும் அட்சயப் பாத்திரத்தை ஏந்தி இருப்பதால்தான் சக்தி தேவி “அன்னபூரணி” என்று போற்றப்படுகிறாள். காசியில் உருவான கடும்பஞ்சத்தினை போக்கவே அன்னை சக்தி திருமாலிடம் வேண்டி இந்த அட்சயப் பாத்திரத்தை பெற்று எல்லோருக்கும் உணவளித்து வந்தாள்.

திருமாலே “அட்சய” என்று சொல்லி முதலில் உணவிட்டதால் இந்த பாத்திரம் அட்சயப் பாத்திரம் என்றானது. பிரம்மனின் தலையைக் கொய்த சிவபெருமானின் கரத்தில் அந்த கபாலம் ஒட்டிக்கொண்டது. எங்கெங்கோ சிவபெருமான் பிட்சாடனராக பிச்சை பெற்றபோதும் அந்த கபாலம் அவருடைய கையை விட்டு நீங்கவே இல்லை. இறுதியில் அன்னபூரணி தமது பாத்திரத்தில் இருந்து பிச்சை இட்டதும் அவரது கரத்தில் இருந்து கபாலம் நீங்கியது.

அன்னபூரணியின் அட்சயப் பாத்திரம் அள்ள அள்ளக் குறையாத அருளை வழங்கக் கூடியது. அன்னபூரணியை வணங்கும் பக்தர்கள் இந்த அட்சயப் பாத்திரத்தையும் சேர்த்தே வணங்குகிறார்கள். கேட்டதைக் கொடுக்கக் கூடிய கற்பக விருட்சம் போன்றது அன்னபூரணியின் கரத்தில் இருக்கும் அட்சய பாத்திரம். காசியில் வீற்றிருக்கும் அன்னை அட்சயப் பாத்திரம் தாங்கியிருக்கிறாள்.
மதுரை மீனாட்சி கிளி

மீனாட்சி அம்மனின் உருவத்தை நினைத்தாலே அவர் திருத்தோளில் இருக்கும் கிளியின் நினைவும் நமக்கு வந்து விடும். மீனாட்சி மதுரையம்பதியை ஆட்சி செய்து வந்த நேரத்தில் பறக்க முடியாத ஒரு கிளி மீனாட்சியை எண்ணி அழுததாம். அகிலத்தையே காக்கும் அந்த அங்கயற்கண்ணி கிளியை தனது கரத்தில் தாங்கி எப்போதும் தன்னோடே இருக்குமாறு வைத்துக்கொண்டாள்

என ஒரு கர்ண பரம்பரை கதை சொல்லப்படுகின்றது. அதுமட்டுமல்ல, அன்னையை வேண்டி வணங்கும் பக்தர்களின் வேண்டுதல்களை மறக்காமல் ஞாபகம் வைத்துக்கொண்டு இந்த கிளிதான் அன்னையிடம் எப்போதும் சொல்லிக் கொண்டு இருக்குமாம். அதனால்தான் பக்தர்கள் அன்னை மீனாட்சியின் மீது மட்டுமல்ல, அவர் ஏந்திய அந்தக் கிளியின் மீதும் பக்தி கொண்டிருக்கிறார்கள்.

காஞ்சி காமாட்சி கரும்பு

அன்பின் கடவுளான மன்மதனிடம்தான் கரும்பு வில்லும் ஐவகை மலர் அம்புகளும் இருக்கும். ஆனால், அன்னை காமாட்சியும் கரும்பு வில்லை வைத்திருக்கிறாள். காரணம், அதில் ஒரு சூட்சுமம் உள்ளது. அன்பும் பாசமும் எப்போதும் ஒரு கட்டுக்குள் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கவே மன்மதனிடம் இருந்து அன்னை கரும்பு வில்லை வாங்கி வைத்திருக்கிறாள்

என்று காஞ்சி மகாபெரியவர் ஒரு முறை சொல்லி இருக்கிறார். அது மட்டுமல்ல மன்மதனை சிவனார் எரித்த பிறகு, சக்தியின் வேண்டுதலுக்காக மன்மதனுக்கு உயிர் கொடுத்து, ரதியின் கண்களுக்கு மட்டுமே தெரியும் விதமாக மாற்றினார்.

ஆனாலும், மன்மதன் எல்லை மீறாமல் இருக்கவும், தர்மநெறி தவறாமல் வாழும் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் தன் திருக்கரத்தில் கரும்பை ஏந்தியபடி காட்சி தருகிறார்.
திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி தாடங்கம்

திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியின் காதுகளில் உள்ள தாடங்கம் ஒரு மங்களச் சின்னம். ஆதியில் திருவானைக்காவில் வீற்றிருந்த அன்னையின் சக்தி அபரிமிதமாக வெளிப்பட்டு உக்கிர வடிவமானாள். அப்போது அங்கு வருகை தந்த ஜகத்குரு ஆதிசங்கரர், அன்னையை வணங்கி சாந்தப்படுத்த முயன்றார்.

அதன்படி அகிலாண்டேஸ்வரியின் சக்தியை ஸ்ரீசக்ரத்தில் ஆகர்ஷணம் செய்து அதையே இரண்டு தாடங்கங்களாக மாற்றி அம்பிகையின் காதுகளில் அணிவித்தார். மேலும் அழகிய கணபதி சிலை ஒன்றையும் உருவாக்கி அன்னையின் எதிரே அமர்த்தி வைத்தார். பிள்ளையைக் கண்டதும் சினம் தணிந்த அன்னை அகிலாண்டேஸ்வரி சாந்தசொரூபியானாள்.

அந்த அழகிய காதணிகளே அன்னையின் அடையாளமாகவும் மாறியது. திருத்தாடங்கம் என்பது அன்னை அகிலாண்டேஸ்வரியின் கிரியாசக்தி. அதை வணங்கினால் செயலில் வெற்றி பெறலாம்.
கொல்லூர் மூகாம்பிகை ஸ்வர்ணரேகை

ஸ்வர்ணரேகை ஜொலிக்கும் லிங்க ரூபமாக அன்னை மூகாம்பிகை கொல்லூரில் ஆட்சி செய்கிறாள். கோல மஹரிஷியின் வேண்டுதலுக்காக சிவனால் உருவாக்கப்பட்ட லிங்கம் இது. லிங்கத்தின் இருபக்கமும் ஸ்வர்ண ரேகையால் பிரிக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் திருமகள், கலைமகள், மலைமகள் அம்சமாகவும், மறுபுறம் நான்முகன், திரு

மால், சிவன் அம்சமாகவும் இருக்கும் அற்புத லிங்கம் இது. கொல்லூர் மூகாம்பிகை என்றாலே இந்த ஸ்வர்ணரேகை லிங்கம் தான் விஷேசமானது. லிங்கத்தின் பின்புறம் உள்ள அன்னையின் திருவுருவம் ஆதிசங்கரரால் அமைக்கப்பட்டது.

மூகாசுரனை சம்ஹரித்ததால், அன்னை மூகாம்பிகை என்று பெயர் பெற்றாள். ஸ்வர்ணரேகை தாங்கி சுயமாகி வந்த லிங்க ரூபிணியான மூகாம்பிகைக்கு லிங்க வடிவே அடையாளம். அதில் ஸ்வர்ணரேகை என்பது சிவசக்தி தத்துவத்தின் வடிவம். மூகாம்பிகையை வணங்கும் எல்லோருக்கும் இந்த ஸ்வர்ணரேகை கொண்ட லிங்கம் வேண்டிய வரம் அருளும்; நல்ல வாழ்க்கையும் அருளும்.

தேவி சரணம் ! ஸ்ரீ மாத்ரே நமஹ !