ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு குவிகிறது: எதிர்க்கட்சிகளும் வரவேற்பு

பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்ததற்காக இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு குவிகிறது: எதிர்க்கட்சிகளும் வரவேற்பு
india-president-election

பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்ததற்கு , எதிர்க்கட்சிகள் கூட்டணியில் உள்ள கட்சிகளும் வரவேற்பும், ஆதரவும் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 18ல் நடக்க உள்ளது. இதில், காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நேற்று முன்தினம் காலையில் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள், திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.மொத்த ஓட்டுகளில், பிஜு ஜனதா தளத்தின் பங்கு 2.8 சதவீதமாக உள்ளது. இந்த ஓட்டுகள், ஜனாதிபதி வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும்.

பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி வேட்பாளராக, முன்னாள் ஜார்க்கண்ட் கவர்னர் திரவுபதி முர்மு நேற்று முன்தினம் இரவு அறிவிக்கப்பட்டார்.பா.ஜ., வேட்பாளரின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி என்றாலும், பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆம் ஆத்மி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட பிராந்திய கட்சிகள், எந்தத் தரப்புக்கு ஆதரவு அளிக்கும் என்பதே, இந்தத் தேர்தலின் வெற்றியை முடிவு செய்யும்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளத் தலைவரும், பீஹார் முதல்வருமான நிதிஷ் குமாரும், திரவுபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்று உள்ளார்.இவர் கடந்த முறை தே.ஜ., கூட்டணியில் இல்லாதிருந்த போதும், ஜனாதிபதி பதவியில் இருந்து செல்லும் ராம்நாத் கோவிந்தை ஆதரித்தார்.

இதற்கிடையே, ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டது குறித்து, ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள தன் கிராமத்தில் திரவுபதி முர்மு கூறியதாவது:தே.ஜ., கூட்டணி சார்பாக என்னை வேட்பாளராக அறிவித்துள்ளதை, 'டிவி'யில் பார்த்து ஆச்சரியமடைந்தேன்; மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நாட்டின் மிக உயரிய பதவிக்கு வேட்பாளராக நிறுத்தப்படுவேன் என கனவிலும் நினைத்து பார்த்ததில்லை.மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த என்னை வேட்பாளராக நிறுத்திஉள்ளது, 'அனைவருடன் இணைந்து, அனைவரின் நலனுக்காக' என்ற பா.ஜ.,வின் கொள்கையை பிரதிபலிப்பதாக உள்ளது. நான் ஒடிசாவின் மகள்; அதனால் எனக்கு ஆதரவாக ஓட்டளியுங்கள் என்று, மாநிலத்தை ஆளும் பிஜு ஜனதா தளத்தின் அனைத்து எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களிடம் கேட்க எனக்கு உரிமை உள்ளது. அவர்களுடைய ஓட்டு எனக்கு கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக திரவுபதி முர்மு தன் சொந்த கிராமத்தில் உள்ள ஒரு கோவிலுக்குச் சென்று, தரையை பெருக்கி சுத்தப்படுத்தி வழிபட்டார். இவர், வரும் 24ம் தேதி தன் வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.,வைச் சேர்ந்த மூத்த மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், பிஜு ஜனதா தளத் தலைவர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட ஆதரவு கட்சித் தலைவர்கள் முன்னிலையில், அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக பா.ஜ., தெரிவித்துள்ளது.

வடகிழக்கு மாநிலமான சிக்கிமின் முதல்வராக உள்ள பிரேம் சிங் தமாங்கும் தன் ஆதரவை தெரிவித்துள்ளார். இவருடைய சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.


இதற்கிடையே, ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர்கள் யஷ்வந்த் சின்ஹா, திரவுபதி முர்முவுக்கு, 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.