ஆச்சி சாதனை படைத்த கின்னஸ்

“ஆண்களின் அதிகார உலகம்” என்று சொல்லப்படும் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக, அதுவும் நகைச்சுவை நடிகையாக அரை நூற்றாண்டு கோலோச்சிய மனோரமா தமிழ் சினிமா உலகின் நகைச்சுவை பேரரசிதான்.

ஆச்சி சாதனை படைத்த  கின்னஸ்
monoramma

பெண் சிவாஜி (ஆச்சி) என்ற அனைவராலும் அழைக்கப்படும் மனோரமா 1937-ம் ஆண்டு மன்னார்குடியில் பிறந்தவர். மனோரமாவின் உண்மையான பெயர் கோபி சாந்தா. நாடக உலகில் கொடி கட்டி பறந்த அவருக்கு அவரது நாடக இயக்குநர் மனோரமா என பெயர் சூட்டினார்.

மனோரமாவின் நாடக நடிப்பைப் பார்த்து வியந்த எஸ்.எஸ்.ஆர் அவரை திரை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். அவர் நடித்த முதல் படம் சில காரணங்களால் வெளிவராமல் போக, பின்னர் கண்ணதாசன் இயக்கிய மாலையிட்ட மங்கை, அவரது அறிமுக படமாக வெளிவந்து அவரை புகழடையச் செய்தது.

தன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ள மனோரமா எவ்வளவு நீளமான வசனமாக இருந்தாலும் ஒரு முறை சொல்லிக் கொடுத்தாலே அப்படியே மனப்பாடம் செய்து நடிக்கும் திறமை பெற்றவர். நான்கு தலைமுறை நடிகர்களுடன் எண்ணற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ள மனோரமா, 5 முதலமைச்சர்களுடன் நடித்தவர் என்ற பெருமையையும் பெற்றவர்.

தன் யதார்த்த நடிப்பால் நகைச்சுவை அரசியாக 55 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி செய்தவர் ‘ஆச்சி’ என சினிமா உலகால் அழைக்கப்படும் மனோரமா. 1958 ஆம் ஆண்டு ’'மாலையிட்ட மங்கை' திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகையாக சினிமா உலகத்துக்குள் பிரவேசித்தார் மனோரமா. 'களத்தூர் கண்ணம்மா', 'கொஞ்சும் குமரி', 'தில்லானா மோகனாம்பாள்', 'எதிர் நீச்சல்', 'பட்டிக்காடா பட்டணமா', 'காசேதான் கடவுளடா' எனத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்துத் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்தார் இந்த ‘ஜில் ஜில் ரமாமணி’ மனோரமா.

5000-க்கும் மேற்பட்ட நாடகங்களிலும் 1500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ள மனோரமா, அதன் மூலம் கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார்.

தமிழக அரசின் கலைமாமணி விருதும், மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் இவருடைய திரை பயணத்தை அலங்கரிக்கின்றன.

நடிகர் நாகேஷ் - மனோரமா இருவரும் இணைந்து சந்திரோதயம், அன்னமிட்ட கை, சரஸ்வதி சபதம், தேர் திருவிழா, பூஜைக்கு வந்த மலர், கலாட்டா கல்யாணம் உள்ளிட்ட 19 திரைப்படங்களில் ஜோடியாக இணைந்து ரசிகர்கள் விரும்பும் காமெடி Couple ஆகினர்.

இவர்கள் இருவரும் திரையில் தோன்றினாலே திரையரங்களில் சிரிப்பு மழை பொழிய ஆரம்பித்துவிடும். அந்தஅளவுக்கு இருவரும் காமெடியில் கலக்கினார்கள்.

'சம்சாரம் அது மின்சாரம்' திரைப்படத்தில் கண்ணம்மா பாத்திரம். "நடிகன்' திரைப்படத்தில் சத்யராஜை விரும்பும் பாத்திரம், 'சின்ன கவுண்டர்' திரைப்படத்தில் சுகன்யாவை வம்பிழுக்கும் பாத்திரம் உட்பட அம்மா, அக்கா, அண்ணி, வில்லி, பாட்டி என திரையில் நடித்த மனோரமா  பல திரைப்பட பாடல்களையும் பாடியுள்ளார்.

  தன்னுடைய 20-ம் வயதில் திரையுலகில் அடியெடுத்து வைத்த மனோரமா, தன் இறுதி காலம் வரை திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

மனோரமா ஒருமுறை தான் அளித்த பேட்டி ஒன்றில் இப்படிச் சொல்லியிருப்பார், ''கடைசி வரை நடிச்சிகிட்டே இருக்கணும்; சினிமா இல்லைனா நாடகம் அதுவும் இல்லைனா தெருக்கூத்தில் கூட நடிக்கத் தொடங்கிவிடுவேன். அது தான் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கும்''

நாடகமோ, திரைப்படமோ, வானொலி அல்லது தொலைக்காட்சி தொடரோ. ஏதாவது ஒரு வடிவத்தில் மனோரமா நடித்துக் கொண்டிருந்தார். மனோரமா ஒரு 'பெண் சிவாஜி' என்று அவரின் நடிப்பை புகழ்ந்து ஒருமுறை நடிகரும், எழுத்தாளருமான சோ குறிப்பிட்டார்.

அதனால் தானோ என்னவோ கடைசி இரண்டு ஆண்டுகளில் உடல்நலமில்லாமல் பெரிதாக நடிக்கவோ, விழாக்களில் கலந்து கொள்ளவோ முடியாத மனோரமா, 2015 10 அக்டோபரில் காலமானார்.

கடைசி வரை நடிக்க முடியவில்லையென்றாலும், இறுதி மூச்சு வரை அவர் சினிமா மற்றும் நடிப்பு குறித்து மட்டும்தான் சிந்தித்துக் கொண்டிருந்தார் என்று   அவரது ரசிகர்களும், அவரை அறிந்தவர்களும் சொல்லுகிறார்கள்