திருப்பதி தயிர்சாதம் ஸ்பெசல்

திருப்பதி தயிர்சாதம் ஸ்பெசல்

தேவையான பொருட்கள்

அரிசி - 250 கிராம், பால் - 1/2 கப், கெட்டித் தயிர் - ஒன்றரை கப், கடுகு - 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், (சன்னா)கடலை பருப்பு - 1tbs, சீரகம் - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - 1 கைப்பிடி,  தூள் முந்திரி - 2டீஸ்பூன், நல்லெண்ணெய் - தாளிக்கத் தேவையான அளவு, மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.
 

 

செய்முறை :

அரிசியை களைந்து ஊற வைத்து குக்கரில் போட்டு ஒன்றரை கப் நீர் விட்டு குக்கரை மூடி வெயிட் போட்டு 5 விசில்கள் வரும் வரை வேக விடவும்.

சாதம் வெந்த பின்பு குக்கரை திறந்து ஒரு கரண்டியால் சாதத்தை கிளறி அதை மென்மையாக மசிக்கவும். மசித்த சாதத்தை ஒரு கிண்ணத்தில் போடவும்.

இப்போது சாதத்தில் அரை கப் காய்ச்சி ஆறிய பால் ஊற்றி நன்கு கலந்து 10 முதல் 12 நிமிடங்கள் ஊற வைக்கவும் பின்பு இதில் கெட்டித் தயிர் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

கிட்டத்தட்ட வெண்ணெய் பதத்தில் சாதம் இப்போது இருக்கும்! ஒரு வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் ஆயில் ஊற்றி அது சூடானதும்..

கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், மிளகுத்தூள், கறிவேப்பிலை, முந்திரித் தூள் பெருங்காயம் போட்டு நன்கு பொரிய தாளிக்கவும்.

தாளிப்பை தயிர்சாதத்தில் கொட்டி கிளறினால் ஐஸ்க்ரீம் போல குழைவான அற்புத ருசியில் ஆந்திர ஸ்டைல் தயிர் சாதம் தயார்!

தயவு செய்து இஞ்சி, வரமிளகாய், பச்சைமிளகாய், மாதுளை, திராட்சை, வெள்ளரி, மாங்கா இதெல்லாம்  சேர்த்துவிடாதீர்கள். இதன் பாரம்பரிய ருசியே மாறிவிடும்!

எல்லா ஊறுகாய்களும் இந்த சாதத்திற்கு நல்ல காம்போ! வத்தக் குழம்பு, அல்லது புளிக் காய்ச்சல், காரமான சிப்ஸ் அல்லது உருளைக் கிழங்கு காரக்கறி மட்டும் இதற்கு தொட்டுக்க இருந்தால்..

அட போங்கப்பா எனக்கே டெம்ப்ட் ஆகுது! ஆவக்காய் ஊறுகாயுடன் வதங்கிய உருளை கார வறுவலோடு 10 வருஷத்துக்கு முன் திருப்பதியில் சாப்பிட்டது இப்போ நாக்கில் வந்து நின்னு ஹலோ சொல்லுது!

{பொடியை விட கட்டிப் பெருங்காயம் சேர்ப்பது ருசியை கூட்டும். செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் இன்னும் சிறப்பு}