நீதிமன்ற உத்தரவு மூலம் ஆசிரியர் வேலை

வேலை கிடைக்காததால் பிச்சை எடுத்து வாழ்ந்து நபருக்கு நீதிமன்ற உத்தரவு மூலம் ஆசிரியர் வேலை

நீதிமன்ற உத்தரவு மூலம் ஆசிரியர் வேலை
ஸ்ரீகாகுளம் கேதாரேஸ்வர் ராவ்

ஆந்திரப் பிரதேச மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், பழையபட்டினம் நீதி கிராமத்தைச் சேர்ந்தவர் கேதாரேஸ்வர் ராவ் (55). இவர், கடந்த 1998 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆனால், இதனை எதிர்த்து சிலர் நீதிமன்றத்தை நாடினர். இதனால், அந்த ஆண்டு தேர்வானவர்கள் யாரும் அரசு பள்ளி ஆசிரியர் ஆக முடியவில்லை.அதனால் இவ்வழக்கு இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.
 ஏழ்மை இவரை வாட்டியது. இதனால், கேதாரேஸ்வர் ராவ் சைக்கிளில் ஊர் ஊராக சென்று துணிகளை விற்க தொடங்கினார். இவர் அணிய சரிவர துணி கூட இல்லை. இவரது நிலைமையை பார்த்து யாரும் துணி வாங்கவும் முன் வரவில்லை. பெற்றோரும் இறந்து விட்டனர். அதனால் அனாதை ஆனார். தான் வசித்து வரும் பாழடைந்த வீட்டைத் தவிர வேறு எதுவும் இவரிடம் இல்லை.

வயிற்று பிழைப்புக்காக பேப்பர்கள், பிளாஸ்டிக் பொருட்களை பொறுக்கி, அதை விற்று வாழ்நாளை கழித்தார். சில நாட்கள் பிச்சை எடுத்தும் பிழைத்து வந்தார். இந்நிலையில், 1998ஆம் ஆண்டு அரசு ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் அனைவருக்கும் அரசு ஆசிரியர் பணி நியமனம் வழங்குமாறு சமீபத்தில் நீதிமன்றம் உத்தரவு வழங்கியது.

அதன்படி, கேதாரேஸ்வர் ராவுக்கும் பணி நியமன உத்தரவு வீடு தேடி வந்தது. இதனை பார்த்து ஆச்சர்யமும், ஆனந்தமும் அடைந்தார் கேதாரேஸ்வர் ராவ். தன்னுடைய வாழ் நாள் முழுவதும் கஷ்டத்தை தவிர வேறு எதையுமே பார்க்காத அவர், முதன் முறையாக தான் கண்ட கனவு நிறைவடையும் நாள் வந்ததை அறிந்ததும் முதலில் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

கடைசி கால கட்டங்களில் தனது பெற்றோரை பார்த்துக்கொள்ள முடியவில்லை. உற்றார், உறவினர் பணம் இல்லாததால் நிர்கதியாக விட்டு சென்றனர். நண்பர்கள் யாரும் நெருங்ககூட இல்லை. யாரும் பண உதவியோ, அல்லது ஆறுதலுக்காக கூட நெருங்கி பேச முன் வரவில்லை. வேலை இல்லாத காரணத்தினால் இவர் இதுவரை திருமணம் கூட செய்துகொள்ளவில்லை.  இத்தனை ஆண்டுகள் துன்பத்தில் மட்டும் தான் கேதாரேஸ்வர் ராவ் காலம் கழிந்தது.

தற்போது, கேதாரேஸ்வர் ராவுக்கு அரசு ஆசிரியர் பணி உத்தரவு கிடைத்ததும், அவர் வசிக்கும் நீதி கிராமமே மகிழ்ச்சியடைந்தது. என்றாவது மாஸ்டர் ஆகி விடுவேன் என கேதாரேஸ்வர் ராவ் அடிக்கடி கூறி வந்ததால், அவரை அந்த கிராமத்து இளைஞர்கள் மாஸ்டர் என்றே  கிண்டல் செய்துள்ளனர். தற்போது அதுவே உண்மையாகிவிட்டது என அந்த ஊர் இளைஞர்கள் ஆச்சர்யத்துடன் கூறுகின்றனர். இதற்காக அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, மாஸ்டர் கேதாரேஸ்வர் ராவுக்கு, தங்களது பரிசாக புத்தம் புதிய செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்தனர். மேலும், பல நாட்கள் யாசகம் கேட்டு திரிந்த ஒரு தெருவில் வியாபாரி ஒருவர், கேதாரேஸ்வர் ராவுக்கு புதிய சட்டைகள், ஜீன்ஸ் பேண்டுகளையும் வாங்கி கொடுத்து பாராட்டியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை இவரை கண்டுகொள்ளாத கிராம மக்கள், இப்போது கேதாரேஸ்வர் ராவை தாங்கு, தாங்கு என தாங்குகின்றனர். சிலர் இவரது வாழ்க்கையை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இதனால், ஒரே நாளில் கேதாரேஸ்வ ராவ் அப்பகுதிகளில் பிரபலமாகிவிட்டார்.