தினமும் 10 வழக்குகளை விசாரிக்க வேண்டும் தலைமை நீதிபதி அதிரடி
சுப்ரீம்கோர்டின் அனைத்து அமர்வுகளும் விசாரிக்கப்பட வேண்டும்- தலைமை நீதிபதி சந்திர சூட்
தினமும் 10 வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டின் அனைத்து அமர்வுகளும் விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுறுத்தி உள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டின் 49-வது தலைமை நீதிபதியாக இருந்தவர் யுயு லலித். அவர் பதவி காலம் முடிவடைந்த நிலையில் நாட்டின் 50-வது தலைமை நீதிபதியாக கடந்த 9-ம் தேதி டி.ஒய் சந்திரசூட் பதவியேற்றுக் கொண்டார். இவர் பணியை தொடங்கிய முதல் நாளிலே வழக்குகளை பட்டியலிட புதிய நடைமுறையை பின்பற்றுமாறு பதிவாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, சுப்ரீம் கோர்ட்டில் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் பதிவு செய்யப்படும் அனைத்து வழக்குகளும், அடுத்த திங்கள் கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்படும்.
மேலும், அவரச வழக்குகள் இருந்தால் நாங்கள் குறிப்பிடுவோம், பிற வழக்குகள் அனைத்தும் தானாக பட்டியலிடப்படும். இது தொடர்பாக நீதிமன்ற பதிவாளருக்கு அறிவுறுத்தி உள்ளதாக தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு அமர்வுகளுக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் புதிய அறிவுறுத்தலை வழங்கி உள்ளார். அதில், ஐகோர்ட்டுகளில் இருந்து சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றப்படும் மனுக்கள், ஜாமீன் கோரிக்கைகள் என தினமும் 10 வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டின் அனைத்து அமர்வுகளும் விசாரிக்க வேண்டும்.
மேலும், தற்போது இந்தியாவில் சுமார் 30 ஆயிரம் மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.