9 நாட்கள்.. 9 நிறங்கள்.. 9 அவதாரங்கள்.!
2022 ஆம் ஆண்டு நவராத்திரி, செப்டம்பர் 26 அன்று தொடங்குகிறது.

நவராத்திரியின் தனிச்சிறப்பே இது முழுக்க முழுக்க பெண்களுக்கான பண்டிகையாகும். அன்னை பராசக்தியின் வெவ்வேறு அவதாரங்கள் நவராத்திரியின் ஒன்பது நாட்களில் கொண்டாடப்படும். 9 இரவுகள் விமரிசையாக கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையின் சிறப்புகளில், ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு வண்ணம் முக்கியத்துவம் பெறும். முதல் நாள் முதல் ஒன்பதாம் நாள் வரை, அந்தந்த நாளுக்கான நிறத்தில் ஆடைகள் அணிந்து பெண்கள் பராசக்தியின் வெவ்வேறு அவதாரத்தை வழிபட்டு மகிழ்வர்.
நவராத்திரி முதல் நாள்
- தேதி: செப்டம்பர் 26
- கிழமை: திங்கள்
- நிறம்: வெள்ளை
வெள்ளை நிறம் (வெண்மை) தூய்மை, அமைதி மற்றும் தவறு செய்யக் கூடாது என்ற குணம், ஆகியவற்றைக் ஒத்ததாக இருக்கிறது. திங்கட்கிழமை அன்று வெண்ணிற ஆடைகளை அணிந்து, பராசக்தியின் ஆசீர்வாதத்தைப் பெறலாம். இதன் மூலம், மன உளைச்சல், குழப்பம், சஞ்சலமான மனம், ஆகியவை நீங்கி, மனம் அமைதி பெறும் மற்றும் பாதுகாப்பு உணர்வு கிடைக்கும்.
நவராத்திரி இரண்டாம் நாள்
- தேதி: செப்டம்பர் 27
- கிழமை: செவ்வாய்
- நிறம்: சிவப்பு
செவ்வாய்க்கிழமையன்று சிவப்பு நிற சேலை அணிந்து நவராத்திரியை கொண்டாடுங்கள். சிவப்பு நிறம் ஆற்றலை குறிக்கிறது, அதுமட்டும் இல்லாமல் ஒரு விஷயத்தில் நாம் எவ்வளவு தீவிரமாக இருக்கிறோம் என்பதையும், காதலையும் சிவப்பு நிறம் தான் குறிக்கிறது. அம்மனுக்கு சிவப்பு நிறம் மிகவும் உகந்தது.
நவராத்திரி மூன்றாம் நாள்
- தேதி: செப்டம்பர் 28
- கிழமை: புதன்
- நிறம்: அடர் நீலம்
புதன்கிழமை அன்று, ராயல் ப்ளூ என்று கூறப்படும் நல்ல அடர்த்தியான நீல நிறத்தில் ஆடைகள் அணியலாம். அடர் நீலம் என்பது தெளிவையும், செழுமையையும், அமைதியையும் குறிக்கிறது.
நவராத்திரி நான்காம் நாள்
- தேதி: செப்டம்பர் 29
- கிழமை: வியாழன்
- நிறம்: அடர் மஞ்சள்
மஞ்சள் நிறம், மகிழ்ச்சி, ஆனந்தம் மற்றும் மங்கலத்தைக் குறிக்கும். அழகான நிறத்தில் நீங்களும் தங்கம் போன்று ஜொலிக்கலாம், நாம் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
நவராத்திரி ஐந்தாம் நாள்
- தேதி: செப்டம்பர் 30
- கிழமை: வெள்ளி
- நிறம்: பச்சை
பச்சை நிறம் செழிப்பு, இயற்கை, வளர்ச்சி, மனதை அமைதிபடுத்தும் சூழல் ஆகியவற்றைக் குறிக்கும். வாழ்வின் புதிய தொடக்கங்களையும் பச்சை நிறம் குறிக்கும். பச்சை நிற ஆடையில் அம்பாளுக்கு பூஜை செய்தால், உங்கள் வாழ்வில் நிம்மதியும், செழிப்பும் நிலைத்து நிற்கும்.
நவராத்திரி ஆறாம் நாள்
- தேதி: அக்டோபர் 1
- கிழமை: சனி
- நிறம்: சாம்பல்
சாம்பல் நிறம் சம நிலை உணர்ச்சிகளைக் குறிக்கிறது. ஒரு நபரை ஒரே மாதிரியான நிலையில், பணிவாக, அடக்கமாக இருக்க உதவுகிறது. நவராத்திரி கொண்டாட்டங்களில் கிரே நிற சேலை தனித்தன்மையுடன் உங்களை வெளிகாட்டும்.
நவராத்திரி ஏழாம் நாள்
- தேதி: அக்டோபர் 2
- கிழமை: ஞாயிறு
- நிறம்: ஆரஞ்சு
ஞாயிற்றுக்கிழமை அன்று, ஆரஞ்சு நிறத்தில் அணிந்து நவதுர்க்கை தேவியை வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். ஆரஞ்சு நிறம் கண்டவுடன் ஈர்க்கும், அரவணைப்பு, மற்றும் உற்சாகம் போன்ற குணங்களைக் கொண்டுள்ளது. இந்த நிறம் அணியும் போது, நீங்கள் உற்சாகமாக உணர்வீர்கள்.
நவராத்திரி எட்டாம் நாள்
- தேதி: அக்டோபர் 3
- கிழமை: திங்கள்
- நிறம்: மயில் பச்சை
மயில் பச்சை மிக அழகான நிறங்களில் ஒன்று. மயில் பச்சை நிறம் எல்லாருக்கும் அழகான, நளினமான தோற்றம் குடுக்கும். இது தனித்தன்மையையும் குறிக்கும் நிறமாகும். சிவப்பு, நீலம், பச்சை நிற ஆடைகளுக்கு, சேலைகளுக்கு மத்தியில் மயில் பச்சை நிறம் தனித்துக் காட்டும்.
நவராத்திரி ஒன்பதாம் நாள்
- தேதி: அக்டோபர் 4
- கிழமை: செவ்வாய்
- நிறம்: பிங்க்
பிங்க் நிறத்தை பிடிக்காதவர்கள் யார் இருக்கிறார்கள், அழகான ரம்மியமான நிறம். அன்பு, காதல், நேசம் ஆகியவற்றின் நிறம் பிங்க். பார்ப்பவர்களை ஈர்க்கும் வண்ணத்தில் பிங்க்கிற்கு தனி இடம் உள்ளது.
நவராத்திரியின் 9 இரவுகளில், பின்வரும் சக்தி அவதாரங்களுக்கு வழிபாடு ஒவ்வொரு நாளும் பூஜை செய்யப்படுகிறது.
- ஷைலபுத்ரி
- பிரம்மசாரிணி
- சந்திரகாந்தா
- கூஷ்மந்தா
- ஸ்கந்தமாதா
- காத்யாயனி
- கல்ராத்ரி
- மகாகௌரி
- சித்திதாத்திரி
ஒவ்வொரு நாளுக்கும் சக்தி சொரூபத்தின் ஒவ்வொரு அவதாரங்களாக வழிபட வேண்டும். தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, முதல் மூன்று நாட்கள் பார்வதி தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் கொண்டாடுகிறார்கள்.