பந்தலூர் அருகே ஏலமன்னா பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தை புலி தேடும் பணிக்காக முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு கால்நடை மருத்துவ குழுவினருடன் தேடும் பணி மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது... தோட்டத் தொழிலாளர்கள் தேயிலை பறிக்க தடை, குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பக்கூடாது எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை...
நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 15 நாட்களில் நான்கு நபர்களை சிறுத்தை தாக்கியுள்ள நிலையில் நேற்று அங்கன்வாடி பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது நான்சி என்கின்ற சிறுமியை சிறுத்தை தாக்கி தேயிலை தோட்டத்திற்குள் இழுத்துச் சென்றுள்ளது,
சிறுமியின் கதறல் சத்தத்தை கேட்ட பொதுமக்கள் தேயிலை தோட்டத்திற்குள் சென்று சிறுத்தை இடமிருந்து சிறுமியை மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுமி பரிதாபமாக உயிர் இழந்தார்.
கடந்த வாரம் சிறுத்தை தாக்கி பெண்மணி ஒருவர் உயிரிழந்த நிலையில்இரு பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில் நேற்று மீண்டும் சிறுத்தை தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சுற்றித் திரியும் ஆட்கொல்லி சிறுத்தையை தேடும் பணிக்காக முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு கால்நடை மருத்துவ குழுவினருடன் தேடும் பணி மூன்றாவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது.
மேலும் தோட்டத் தொழிலாளர்கள் தேயிலை பறிக்க தடை விதித்தும், குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பக்கூடாது எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் சிறுத்தையை விரைந்து பிடிக்க கோரி கூடலூர்,பந்தலூர் பகுதிகளில் பொதுமக்கள் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றர்.இதனால் கேரள மாநிலத்திற்கு போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கபட்டுள்ளது.