கொலு டிப்ஸ்!

'பெயின்ட்' போயிருந்தால், மீண்டும் அதே நிறத்தில், 'டச் அப்' செய்யவும்

கொலு டிப்ஸ்!
navarathiri

நவராத்திரி ஆரம்பிப்பதற்கு ஒரு வாரம் முன்பே பொம்மைகளை வெளியே எடுத்து, நன்கு துடைக்கவும்; பொம்மைகளில், 'பெயின்ட்' போயிருந்தால், மீண்டும் அதே நிறத்தில், 'டச் அப்' செய்யவும்

* கொலுவை பார்க்க வரும் கன்னிப் பெண்களுக்கு மருதாணி, வளையல் மற்றும் பொட்டு சேர்த்து தாம்பூலம் கொடுக்கலாம். ஒன்பது நாட்களுக்கும், தினம் குறைந்தது ஐந்தாறு பெண்மணிகளுக்காவது தாம்பூலம் கொடுக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும்
* வீட்டில் இடம் பெரிதாக உள்ளவர்கள், ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஒரு தீம் எடுத்து, ரெகுலரான கொலுவுடன் அதையும் வைக்கலாம்

* நவராத்திரி கொலுவில் வைக்க, நாமே கலசம் செய்யலாம். வருடா வருடம் வித விதமாக, நம் கற்பனை திறனுக்கு ஏற்ப அலங்காரம் செய்யலாம்

* கொலு படிக்கட்டுகளில், ஓரிழை கோலம் போட வேண்டும். ஒன்பது நாட்களும் கொலு நல்லபடியாக தங்கு தடையின்றி நடக்க வேண்டும் என்று இறைவனை வேண்டி, 'லக்ஷ்மி கல்யாணம்' பாடி ஆரம்பிப்பது நல்லது

* கொலுவில், 'பார்க்' அமைக்க விரும்பினால், நவராத்திரி ஆரம்பிக்கும் முன், கடுகு, வெந்தயம், ராகியை பிளாஸ்டிக் கப்புகளில் விதைத்து, வளர விடலாம்

* சுண்டல் போட்டுக் கொடுக்க, காய்ந்த இலை தொன்னைகளை உபயோகப்படுத்தலாம்

* உங்கள் ஏரியாவில் பாட்டு, வீணை என்று அசத்திக் கொண்டிருக்கும் பெண் குழந்தைகளை அழைத்து, கொலுவில் கச்சேரி செய்யச் சொல்லலாம்

* நவராத்திரி ஆரம்பித்து முடியும் வரை, கொலுவில் விதவிதமான கோல டிசைன்களையும், கோலம் போட தேவையான பொருட்களையும் முன்பே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.அரிசி மாக்கோலம், கோல மாவு கோலம், ரங்கோலி, பூக்கோலம், ஜவ்வரிசி கோலம், கலர் உப்பு கோலம், இன்ஸ்டன்ட் ரங்கோலி, நீர் மேல் கோலம், நீரின் அடியில் கோலம் மற்றும் நவதானிய கோலம் போடலாம்

* தினமும் இரவில் கொலு பொம்மைகளை ஆரத்தி எடுத்தல் அவசியம்

* மொத்தமாக ஒரே ஆண்டில் நிறைய பொம்மைகளை வாங்காமல், அந்தந்த, 'ட்ரெண்டு'க்கு ஏற்ற மாதிரி ஒவ்வோர் ஆண்டும் வாங்கி கொலு வைக்கலாம்

*  கொலு முடியும் நாள், மறக்காமல் மரப்பாச்சி பொம்மைகளை படுக்க வைக்க வேண்டும்.

படிக்கட்டில் போடக்கூடிய வேஷ்டி அல்லது புடவையை துவைத்து, 'அயர்ன்' செய்து தயாராக வைக்கவும்

* கொலுவுக்கு வருகிறவர்களுக்கு கொடுக்கப் போகும் பரிசாக, வீட்டிலேயே சின்னச் சின்ன, 'கிராப்ட் ஒர்க்'காக செய்து கொடுக்கலாம் அல்லது முன்கூட்டியே மொத்தமாக வாங்கி வைக்கவும்

* ஒன்பது நாளும் நீங்க என்ன உடை அணிய வேண்டும் என்பதை தேர்வு செய்து, புடவையாக இருந்தால், அதன் மேட்சிங் பிளவுஸ், சுடிதாராக இருந்தால், ஷால் என, 'செட்'டாக எடுத்து வையுங்கள்

* யார் யாரை கூப்பிடப் போகிறோம் என்ற பட்டியல் தயார் செய்து, அவர்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்

* ஒன்பது நாட்களுக்கும் என்னென்ன நைவேத்தியம் செய்யப் போகிறோம் என்பதையும் முடிவு செய்து, அதற்கான பொருட்களை வாங்கி தனித்தனி பாக்கெட்டில் போட்டு வையுங்கள்

* வருகிறவர்களுக்கு சுண்டல் போட்டுக் கொடுக்க, தொன்னை, பேப்பர் பிளேட் மற்றும் டம்ளர்களை எவ்வளவு தேவைப்படும் என்று கணக்கிட்டு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.