பகத் சிங்

தேச விடுதலைப் போராட்டத்தில் மிக இளம் வயதிலேயே பகத் சிங்குக்கும் ஆர்வம் வந்துவிட்டது

பகத் சிங்
bhagat-singh

சுதந்திரப் போராட்டத்தில் காந்தியடிகள், சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங் ஆகியோரது செயல்பாடுகள் வெவ்வேறுவிதமாக இருந்தாலும், நோக்கம் என்பது ஒன்றாகத்தான் இருந்தது. சுதந்திரப் போராட்டத்தில் பகத் சிங்கின் பங்களிப்பு அவரை ஒரு புரட்சியாளராக நிலைநிறுத்தியிருக்கிறது.

பகத் சிங் பிறந்தபோதே அவரது குடும்பத்தில் பலரும் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று, சிறைக்குச் சென்று வந்திருந்தனர். அதனால் தேச விடுதலைப் போராட்டத்தில் மிக இளம் வயதிலேயே பகத் சிங்குக்கும் ஆர்வம் வந்துவிட்டது. உலக வரலாறுகளைப் படித்தார். விளாடிமிர் லெனின், லியோன் ட்ராட்ஸ்கி, மிகையேல் பகுனின் எழுத்துகளை விரும்பினார். ஆரம்பத்தில் காந்தியின் கொள்கைகள் மீது ஆர்வம் கொண்டிருந்த பகத் சிங், பின்னர் மார்க்சியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.

ஜலியான் வாலாபாக்கில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டதை நேரில் கண்டதும் ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி திரும்பப்பெற்றதும் புரட்சிகரப் போராட்டத்தை பகத் சிங் தேர்ந்தெடுக்கக் காரணங்களாக அமைந்தன.

நவ ஜவான் பாரத சபாவை 1926இல் நிறுவிய பகத் சிங், அதன் செயலாளராகவும் பணியாற்றினார். இந்த அமைப்பு விவசாயிகள், தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் புரட்சி நடத்த அழைப்புவிடுத்தது. பகத் சிங்குக்குத் திருமண ஏற்பாடு நடந்தபோது, ‘என் வாழ்க்கையைத் தாய்நாட்டுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் இருப்பதால், வேறு எதிலும் ஆர்வம் இல்லை’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, சென்றுவிட்டார்.

சுகதேவ், சந்திரசேகர ஆசாத் போன்றோருடன் இணைந்து 'இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசுக் கழகத்தை' 1928இல் அவர் நிறுவினார். காவல்துறை கண்காணிப்பாளர் ஜேம்ஸ் ஸ்காட்டின் உத்தரவின் பேரில் காவல்துறை நடத்திய தடியடியில் லாலா லஜபதிராய் உயிரிழந்தார். பகத்சிங்கும் அவரது அமைப்பினரும் பெரிதும் மதித்த லஜபதி ராயின் மரணத்திற்குப் பழிவாங்க முடிவுசெய்தனர்.

ஜேம்ஸ் ஸ்காட்டுக்குப் பதிலாக ஜான் சாண்டர்ஸைத் தவறுதலாகச் சுட்டுவிட்டனர். 1929இல் பகத் சிங்கும் பதுகேஷ்வர் தத்தும் ஆங்கிலேயர்களை மிரட்டுவதற்காக டெல்லி சட்டமன்றத்தில் வெடிகுண்டை வீசி, ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்று கோஷம் எழுப்பினர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பில்லை என்றாலும் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

சிறையில் அரசியல் கைதிகளைப் போல் நடத்த வேண்டும் என்று உண்ணாவிரதப் போராட்டத்தில் பகத் சிங் ஈடுபட்டார். ஏராளமான தலைவர்கள் பகத் சிங்கை சந்தித்து, உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். தன் அப்பாவுக்காகவும் தலைவர்களுக்காகவும் 116 நாள்களுக்குப் பிறகு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் பகத் சிங்.

பகத் சிங்கின் செல்வாக்கு மக்களிடம் அதிகரிப்பதை அறிந்த ஆங்கிலேய அரசு, சாண்டர்ஸ் வழக்கையும் இந்த வழக்குடன் இணைத்தது. பகத் சிங், ராஜ குரு, சுகதேவ் ஆகிய மூவருக்கும் தூக்குத் தண்டனை விதித்தது. நாடு முழுவதும் இந்தத் தண்டனைக்கு எதிர்ப்பு உருவானது. 1931 மார்ச் 23இல் ராஜகுரு, சுகதேவ் ஆகியோருடன் பகத் சிங் தூக்கிலிடப்படுவதற்கு முன், ‘ஆங்கில ஏகாதிபத்தியம் ஒழிக’ என்றே முழக்கமிட்டார்.

இவர்களின் வீரமரணம் லட்சக்கணக்கான இளைஞர்களை சுதந்திரப் போராட்டத்தில் எழுச்சியுடன் ஈடுபட வைத்தது. இன்றும் ஒரு புரட்சியாளராக இந்தியர்களின் மனத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் பகத் சிங்.