சுவையான மோர்க்குழம்பு

வெயிலுக்கு அருமையான மோர்க்குழம்பு செய்தால்.

சுவையான மோர்க்குழம்பு
மோர்க்குழம்பு
 
தேவையான பொருட்கள்
 
கெட்டியான தயிர் - 2 கப்
தேங்காய்த்துருவல் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 3
சீரகம் - 1/4 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 3
பூண்டு பற்கள் - 2
இஞ்சி - சிறிய துண்டு 
ஊறவைத்த துவரம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
ஊறவைத்த அரிசி - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன் 
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கடுகு உளுந்து - 1/2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 1
கறிவேப்பிலை - சிறிது
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 1 டேபிள் ஸ்பூன் 
கொத்தமல்லி தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
 
பருப்பு வடை செய்வதற்கு
 
கடலைப்பருப்பு - 1 கப்
மிளகாய் வற்றல் - 4
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - 1 டீஸ்பூன் 
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 1/2 கப்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்
 
பருப்பு வடை செய்முறை
 
1. கடலைப்பருப்பை கழுவி 3 மணிநேரம் ஊறவைத்துக் கொள்ளவும். பின் தண்ணீரை முழுவதும் வடிகட்டிக் கொள்ளவும். 
 
2. மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி, மிளகாய் வற்றல் மற்றும் ஊறவைத்த பருப்பை சேர்த்து 3 முறை பல்ஸ் மோடில் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். 
 
3. அரைத்த கலவையை அகலமான பாத்திரத்தில் மாற்றி அதில் பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், உப்பு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். 
 
4. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி உள்ளங்கையில் வைத்து லேசாக தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்துக் கொள்ளவும். இப்போது மோர்க்குழம்புக்கு பருப்பு வடைகள் தயார். 
 
குழம்பு செய்முறை
 
1. மிக்ஸி ஜாரில் கெட்டியான தயிரை சில நிமிடங்கள் நன்றாக அடித்துக் கொள்ளவும். 
 
2. ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் 1/4 கப் தேங்காய் துருவல், 1/4 டீஸ்பூன் சீரகம், 3 பச்சை மிளகாய், 3 சின்ன வெங்காயம், 2 பூண்டு பற்கள், சிறிய துண்டு இஞ்சி, 1 டேபிள் ஸ்பூன் ஊறவைத்த துவரம்பருப்பு, 1 டீஸ்பூன் ஊறவைத்த அரிசி மற்றும் 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். 
 
3. ஒரு குழம்பு பாத்திரத்தில் மிக்ஸியில் ஜாரில் கடைந்த மோர், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து 1/2 கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். 
 
4. வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் கடுகு உளுந்து, மிளகாய் வற்றல் கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து சேர்த்து தாளித்து மோர் கலவையில் சேர்த்துக் கொள்ளவும். 
 
5. இப்போது தயார் செய்து வைத்துள்ள மோர் கலவையை குறைவான சூட்டில் வைத்து (இடை இடையே ஒரு கரண்டியால் லேசாக கிண்டி விடுங்கள்) ஓரங்களில் இருந்து நுரைத்து பொங்கி வரும் போது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். சில நிமிடங்கள் மூடாமல் அப்படியே வைத்திருக்கவும். பின் பொரித்த வடையை சேர்த்து கலந்து மூடி வைக்கவும். சுவையான மோர் குழம்பு தயார்.