உஜ்வாலா திட்டத்தில் மறு பதிவு கண்காணிப்பு.

உஜ்வாலா திட்டத்தில் மறு பதிவு கண்காணிப்பு.

பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெற்ற 92 ஆயிரம் பயனாளிகளின் மறு சிலிண்டர் பதிவை உறுதி செய்ய,மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டத்தில் அறிவுறுத்தல்.


விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத்தலைவர் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர்  தலைமையில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர் செயலர்/மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன்  முன்னிலையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மத்திய அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணித்திடும் பொருட்டு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டம் காலாண்டிற்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி 2023-24-ஆம் நிதியாண்டிற்கான முதலாம் காலாண்டிற்கான கூட்டம் இன்று நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் தொடர்புடைய மாவட்ட அளவிலான அனைத்து அலுவலர்களிடம் திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில், விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களான பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டம், பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம், தேசிய உணவு பாதுகாப்புச் சட்ட பொது விநியோகத்திட்டம்,  தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம், பிரதம மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா, டிஜிட்டல் இந்தியா -  ஜல் ஜீவன் மிஷன் திட்டம், பிரதம மந்திரி கிராம முன்னேற்றத் திட்டம்PMAGY), பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (PMGSY),  உட்பட 37   திட்டங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள், இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பணிகள், முடிவுற்ற பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் துறை வாரியாக ஆய்வு  மேற்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகளை தரமாக விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

ஆய்வுக்கூட்டத்தில் பேசிய எம்.பி மாணிக்கம் தாகூர்,
பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் பயன்பெற்ற 92 ஆயிரம் பயனாளிகளில் 84 ஆயிரம் பயனாளிகள் தான்  மறு சிலிண்டர் பதிவு செய்து பயன்பெற்று வருகின்றனர் என்றும் 8 சதவிகித மறுபதிவு குறைந்ததற்கான காரணத்தை கண்டறிந்து அதை நிவர்த்தி செய்து திட்டத்தை முழுமை பெற அலுவலர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும்,அதே போல் பள்ளிகள் விரைவில் திறக்க உள்ளதால்,அவற்றின் அருகில் போதை பொருட்கள் விற்பனையை தடுத்து கண்காணிக்கும் வகையில் பள்ளிகள் அளவில் ஒரு குழு அமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி காவல்நிலையம் மூலம் பள்ளிப்பகுதியில் கண்காணிப்பை உறுதி செய்வதோடு மாணவர்களுக்கும் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் வாரம் ஒருமுறை இது சம்மந்தமாக கூட்டம் நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. மேலும், மத்திய அரசு திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளில் என்னென்ன சிரமங்கள் உள்ளது என்பது குறித்தும், என்னென்ன திட்டங்களுக்கு நிதி வராமல் நிலுவையில் உள்ளது என்பது குறித்தும், புதிய திட்டங்களுக்கு தேவையான நிதிகள் ஆகியவை குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கும் பட்சத்தில் அது குறித்து, சம்பந்தப்பட்ட துறை மத்திய அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, விருதுநகர் மாவட்டத்திற்கு தேவையான திட்டங்கள் அனைத்தும் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், அரசு அலுவலர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கி, விருதுநகர் மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல  அனைவரின் ஒத்துழைப்பை நல்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார்,  விருதுநகர்.சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் மற்றும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் ஆகியோர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.