பிரபல ஆயுள் காப்பீடு திட்டங்களை திரும்பப் பெற்றது LIC

ப்ரீமியம் விலையை ஏற்க மறுப்பதால் அந்த காப்பீடு திட்டங்களை உடனடியாக திரும்பப் பெறுவதாக எல்.ஐ.சி., அறிவித்துள்ளது.

பிரபல ஆயுள் காப்பீடு திட்டங்களை திரும்பப் பெற்றது LIC

 

எல்.ஐ.சி., நிறுவனம் டெர்ம் இன்சூரன்ஸ் பிரிவில் ஜீவன் அமர் மற்றும் டெக் டெர்ம் ஆகிய இரண்டு காப்பீடு திட்டங்களை 2019 முதல் வழங்கி வந்தது. கோவிட்டிற்கு பிறகு காப்பீடு ப்ரீமியங்கள் உயர்ந்துள்ளன. 

மறு காப்பீடு நிறுவனங்கள் ஜீவன் அமர் மற்றும் டெக் டெர்மின் தற்போதைய ப்ரீமியம் விலையை ஏற்க மறுப்பதால் அந்த காப்பீடு திட்டங்களை உடனடியாக திரும்பப் பெறுவதாக எல்.ஐ.சி., அறிவித்துள்ளது.

காப்பீடுகளில் பல வகை உண்டு. 

ஆனால் காப்பீட்டிற்கு முழு அர்த்தம் கொடுக்கும் திட்டம் என்றால் அது டெர்ம் இன்சூரன்ஸ் திட்டம் தான். குறைந்த ப்ரீமியம் செலுத்தி அதிக தொகைக்கு இதன் மூலம் காப்பீடு செய்துகொள்ளலாம்.

 ஒருவரது எதிர்பாராத மரணத்தை ஈடுசெய்ய இந்த பணம், காப்பீடு எடுத்தவரின் குடும்பத்திற்கு உதவும். இதனை எல்.ஐ.சி., நிறுவனம் ஜீவன் அமர் மற்றும் டெக் டெர்ம் ஆகிய பெயர்களில் வழங்கி வந்தது. இத்திட்டங்கள் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக டெக் டெர்ம் காப்பீடை ஆன்லைன் மூலம் மட்டுமே வாங்க முடியும்.

 காப்பீடு ஆலோசகருக்கான கமிஷன் தொகை இதில் கிடையாது. 30 வயதுக்குட்பட்டவர்கள் ரூ.50 லட்சத்திற்கான காப்பீடை ரூ.10 ஆயிரத்திற்குள் இதில் பெற்று வந்தனர்.

2019 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இரண்டு திட்டங்களின் பிரீமியம் 3 ஆண்டுகளாக மாறவில்லை. அதே சமயம் கடந்த 3 ஆண்டுகளில் மற்ற தனியார் நிறுவனங்கள் பிரீமியத்தை 40% வரை உயர்த்தியுள்ளன.

 கோவிட் பாதிப்பினால் ஒரே சமயத்தில் பலர் உயிரிழந்தது, காப்பீடு நிறுவனங்களின் லாபத்தை பாதித்தது. இந்த அனுபவம் காரணமாக டெர்ம் இன்சூரன்ஸ் பிரீமியத்தை நிறுவனங்கள் உயர்த்தின.

ரீஇன்சூரர்கள் காப்பீடு நிறுவனங்களுக்கு காப்பீடு வழங்குபவர்கள். இவர்களும் தங்கள் ப்ரீமியம் கட்டணத்தை ஏற்றினர். 

மேலும் இந்த தொகைக்கு டெர்ம் காப்பீடு வழங்கினால் அதற்கு எங்களால் காப்பீடு தர முடியாது என்றனர். இதனால் அவ்விரு திட்டங்களை எல்.ஐ.சி., உடனடியாக திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. 

புதிய ப்ரீமியம் தொகையுடன் அவை மீண்டும் அறிமுகப்படுத்தப்படும். ஏற்கனவே இத்திட்டங்களை தேர்ந்தெடுத்தவர்களுக்கு பழைய ப்ரீமியம் தொகையே தொடரும்.