சிவகங்கை மாவட்டத்தில் கட்டிடப்பணிகள் ஆட்சியர் ஆய்வு
சிவகங்கை மாவட்டத்தில் கட்டிடப்பணிகள் ஆட்சியர் ஆய்வு
சிவகங்கை மாவட்டம்,
திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில், கீழடி அகழ் வைப்பகக் கட்டிடப் பணிகள்
மற்றும் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகக் கட்டுமானப் பணிகள், பள்ளிகளில்
கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவது உள்ளிட்ட பணிகள் தொடர்பாக,
மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி,
நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில், கீழடி அகழ் வைப்பகக் கட்டிடப் பணிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகக் கட்டுமானப் பணிகள், பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவது உள்ளிட்ட பணிகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்,
வரலாற்று சிறப்பு மிக்க சிவகங்கை மாவட்டத்தில்,
நமது சங்ககால தமிழர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை உலகத்தமிழர்கள் பார்த்து, அறிந்து கொள்கின்ற வகையில், அகழாய்வுப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றில் 2,000 ஆண்டுகளுக்கு முன்னதாக அவர்கள் நாகரீகத்துடன் வாழ்ந்து வந்த காலங்களில் அவர்கள் பயன்படுத்திய தொல்பொருட்கள் இவ்வகழாய்வுப் பணியில் கண்டெடுக்கப்படுகிறது. அவ்வாறு கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாகவும், அப்பொருட்களை பொதுமக்கள் பார்த்து அறிந்து கொள்ளும் வகையிலும், கீழடியில் செட்டுநாடு கலைநயத்துடன் கூடிய புதிய அகழ் வைப்பகக் கட்டிடம் கட்டப்பட்டு, இக்கட்டுமானப் பணிகள் மட்டும் நிறைவு பெற்றுள்ளது.
மேலும், கிடைக்கப் பெற்ற தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாக, பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதிக்குள் அப்பணிகள் நிறைவு பெறுவதற்கு திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக இன்றையதினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகளை விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.
அதனைத்
தொடர்ந்து, திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.3.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அலுவலகக் கட்டுமானப் பணிகள் தொடர்பாகவும், திருப்புவனம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்காக வரப்பெற்ற அரசு அனுமதியின்படி, இடம் தேர்வு செய்வதற்கான பணிகள்
தொடர்பாகவும் மற்றும் வைகை வடகரைப் பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடர்பாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர், ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளின் போது, தொல்லியியல் துறை ஆணையர் (மு.கூ.பொ) ஆர்.சிவானந்தம், கீழடி கட்டட மையம் (ம) பாதுகாப்பு கோட்டம், (சென்னை) செயற்பொறியாளர் மணிகண்டன், கீழடி அகழாய்வு இணை இயக்குநர் ரமேஷ், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ப.சின்னைய்யா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) செந்தில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.சுவாமிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அங்கயற்கண்ணி, ராஜசேகரன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.