வாழ்க்கையை சுலபமாக சமாளிப்பவர் யார்..??

0
113

– “சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாறு’ என்ற நூலிலிருந்து..

1903-ஆம் ஆண்டு. இடம் லண்டன். மேடை நாடகங்கள் மிகப் பிரபலமாக இருந்த காலகட்டம் அது. மாலை நேரத்தை மகிழ்ச்சியாகச் செலவழிக்க நாடகக் கொட்டகைகளுக்கு மக்கள் திரண்டு வந்தார்கள். லண்டனில் ஏராளமான நாடக குழுக்கள் ஓர் அரங்கில் “ஷெர்லாக் ஹோம்ஸ்’ நாடகத்துக்கான ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. தினசரி ஒரு சிறுவன் ஒத்திகைக்கு வந்து கொண்டிருந்தான். இறுதிக்கட்ட ஒத்திகை அன்று நடந்து கொண்டிருந்தது. மறுநாள் நாடகம். “பில்லி’ என்ற வேலைக்காரன் பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த சிறுவனுக்குக் காய்ச்சல் என்ற தகவல் வந்தது.

பாத்திரம் வேலைக்காரன் என்றாலும், நிறைய வசனம் பேச வேண்டிய முக்கியமான பாத்திரம். தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. புதிதாக யாரையும் ஏற்பாடு செய்து தயார் செய்ய முடியாத நிலை. வழக்கமாக அந்தச் சிறுவனைப் பார்த்த இயக்குநர் “டேய் தம்பி நடிக்கிறாயா?’ என்று கேட்டார். அந்தக் கேள்விக்காகத்தானே அந்தச் சிறுவன் காத்துக் கொண்டிருந்தான். “யெஸ் சார்’ என்றான் சிறுவன். “வசனமெல்லாம் மனப்பாடம் பண்ணணுமே முடியுமா?’ என்று கேட்டார் இயக்குநர். பில்லி பாத்திரத்தின் வசனங்களைக் கடகடவென்று ஒப்பித்தான் சிறுவன். தினசரி கேட்டுக் கொண்டிருந்த வசனங்கள் ஆயிற்றே , சபாஷ் என்று அவனை அணைத்துக் கொண்டார் இயக்குநர்.

மறுநாள் மேடையில் அட்டகாசமாக நடித்து அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றான் அவன். அப்போது அந்தச் சிறுவனுக்கு 14 வயது தான். அந்தச் சிறுவன்தான் பின்னாளில் சிறந்த சிரிப்பு நடிகராகவும், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராகவும் உயர்ந்த சார்லி சாப்ளின் என்ற சாதாரண மனிதர்.

உலகத் திரைப்படச் சரித்திரத்தில் ஒரு சிரிப்பு நடிகர். எண்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்து இயக்கியிருக்கிறார் என்றால், அது சார்லி சாப்ளின் மட்டும் தான். அது மட்டுமா? பதினெட்டுப் படங்களுக்கு அவர் இசை அமைத்திருக்கிறார்.

சார்லி சாப்ளின் இளம் வயது வாழ்க்கையில் ஏகப்பட்ட இன்னல்கள் இடையூறுகள். அப்பா சிறந்த பாடகர். மேடை நடிகர். அம்மாவும் அதே போலத்தான். சார்லி சாப்ளின் முழுப் பெயர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின். அவருக்கு ஒரு சகோதரர். அவர் பெயர் சிட்னி சாப்ளின். சார்லிக்கு பத்து வயதாகும் போது, தந்தை இறந்துவிட்டார். தந்தை இறந்த சில மாதங்களில் தாயும் உடல்
நலமில்லாமல் படுத்துவிட, குடும்பப் பாரம் பத்து வயது சார்லியின் தலையில் விழுந்தது. அம்மாவும், அப்பாவும் நாடகத் துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் சார்லிக்கு இயல்பாகவே நாடக ஆர்வமும், நடிப்பில் பிடிப்பும் இருந்தன. நாடகக் குழுக்கள் ஒத்திகை நடக்கும் இடங்களுக்குச் சென்று வாய்ப்பு கேட்பதும், அது கிடைக்காத சமயங்களில் அந்தக் குழுக்களில் எடுபிடி
பையன்கள் போல வேலை செய்தும் காலத்தைப் போக்கினார்கள் சார்லி சகோதரர்கள். எட்டாவது லங்காஷர் பையன்கள் என்ற சிறுவர்கள் நாடக, இசைக்குழுவில் நடனமாடும் வாய்ப்பு சார்லிக்குக் கிடைத்தது. ஆஹா இந்தச் சிறுவன் மிக அற்புதமாக நடனம் ஆடுகிறானே என்று அனைவரும் வியந்தனர். இந்த நிலையில்தான் “ஷெர்லாக் ஹோம்ஸ்’ நாடகத்தில் வேலைக்காரச் சிறுவனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவே சார்லியின் வாழ்க்கையில் திருப்புமுனை.

சார்லிக்கு திரைப்பட வாய்ப்பு 1913- ஆம் ஆண்டு தேடிவந்தது. “கீ ஸ்டோன்’ திரைப்பட நிறுவனத்தில் வார சம்பளத்துக்கு நடிகராக ஒப்பந்தம் போடப்பட்டது. தொள தொள கால்சட்டை, தலையில் குல்லா, டூத் பிரஸ் மீசை, கையில் பிரம்பு என்று வித்தியாசமான தோற்றத்தில் திரையில் குடுகுடுவென்று ஓடிச் சென்றபடி நகைக்க வைத்த சார்லியின் படங்கள் கொட்டகை நிறைந்த காட்சிகளாக ஒடின. ஒவ்வொன்றிலும் வித்தியாசமான பாத்திரங்களை ஏற்று நடித்தார் சார்லி. குறிப்பாக “இரவு ஒரு மணி’ என்ற படத்தில் இவர் ஒருவர் தான் படம் முழுவதும்
வருவார். வேறு எந்த நடிகர்களும் கிடையாது.

சொந்தமாகப் படங்கள் எடுத்தால் இன்னமும் சுதந்திரமாகவும், பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்ததாகவும், வெளியிடலாமே என்ற எண்ணம் தோன்றியது. ஸ்டூடியோ ஒன்றைக் கட்டினார் சார்லி. அதன் பிறகு வெளிவந்த அவரது “ஒரு நாயின் வாழ்க்கை’ என்ற படம் சிறப்பாகப் பேசப்பட்டது. அந்த நிலையில் முதல் உலகப்போர் மூண்டது. யுத்த சூழலை நகைச்சுவையோடு கலந்து அவர் நடித்த “சோல்டர் ஆர்ம்ஸ்’ என்ற படம் சார்லியின் புகழை உச்சத்துக்குக் கொண்டு சென்றது. 1921-இல் அவர் தயாரித்து வெளியிட்ட “தி கிட்’ என்ற படம் மக்களால் பரபரப்பாகப் பேசப்பட்டது.

1921-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐரோப்பாவுக்கு அவர் சுற்றுப்பயணம் வந்த போது அவரை வரவேற்கவும், பார்க்கவும் மக்கள் கூட்டம் அலைமோதியது. “நகைச்சுவை உயர்வு எல்லோருக்கும் இருக்க வேண்டும். நகைச்சுவை உணர்வு கொண்டவன் வாழ்க்கையைச் சுலபமாகச் சமாளிப்பான். அந்த வகையில் மக்களைச் சந

்தோஷப்படுத்துவதே என் நடிப்பின் நோக்கம்’ என்று மக்கள் தந்த வரவேற்பில் பேசினார் சார்லி சாப்ளின். 1966-இல் மார்லன் பிராண்டோவும், சோபியா லாரனும் இணைந்த நடித்த படம் தான் அவர் தயாரித்த கடைசிப்படம்.

திரைப்படத்துறையில் மட்டுமல்ல எழுத்துத்துறையிலும் தனது திறமையை நிரூபிக்கும் வகையில் தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி நான்கு புத்தகங்களை எழுதியிருக்கிறார் சார்லி.

1977- ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று அவரது சிரிப்பு நின்று போனது. லட்சியத்தை விடாமல் முயற்சி மற்றும் கடின உழைப்புடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதைச் சொல்கிறது சார்லி சாப்ளினின் வாழ்க்கை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here