ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி உயிரை விட்ட ‘பஞ்சாப் சிங்கம்’ லாலா லஜபதி ராயின் கதை..!!

0
81

சமூக சீர்திருத்தத்திற்கும், தேச விடுதலைக்கும் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்களில் ஒருவர் லாலா லஜபதி ராய். இவர் ஒரு எழுத்தாளர், சுதந்திரப் போராட்ட வீரர். லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் லால் என்பது லாலா லஜபதி ராயை குறிக்கும்.

பிறப்பு..

லாலா லஜபதி ராய் அவர்கள் 1865 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி பஞ்சாபில் உள்ள மோகாவில், துதிகே என்னும் ஊரில் முன்சி ராதா கிசான் ஆசாத் மற்றும் குலாப் தேவி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தை உருது ஆசிரியராக பணிபுரிந்த அரசு பள்ளியிலேயே லாலா லஜபதி ராய் கல்வி கற்றார். ஏழ்மை நிலையிலும் 1880 ஆம் ஆண்டு லாகூர் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் படித்து வழக்கறிஞராக பணியாற்றினார். அப்போது அவருக்கு சுவாமி தயானந்த சரஸ்வதியின் இந்து சீர்திருத்த இயக்கத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டதால் ஆர்ய சமாஜ் இயக்கத்தில் உறுப்பினரானார். மேலும் ஆர்ய கெஜெட் என்ற பத்திரிக்கையையும் தொடங்கினார்.

சுதந்திர போராட்டத்தில் பங்கு..

இளமையில் இருந்தே பிறந்த நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் லாலா லஜபதி ராய்க்கு இருந்தது. அதனால் ஆங்கிலேய அடிமை ஆட்சியில் இருந்து இந்தியாவை விடுவிக்க வேண்டும் என எண்ணினார். 1888 ஆம் ஆண்டு அலகாபாத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். 1905 ஆம் ஆண்டு இந்திய மக்களின் நிலைமையை எடுத்துரைக்க இந்திய தேசியக் காங்கிரசின் பிரதிநிதியாக கோபால கிருஷ்ண கோகலேயுடன், லாலா லஜபதி ராய் இங்கிலாந்து சென்றார். இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்து பஞ்சாபில் அரசியல் கிளர்ச்சிக்குக் காரணமானார். அதனால் ஆங்கிலேய அரசு 1907-ல் அவரை விசாரணையின்றி பர்மாவிற்கு நாடு கடத்தியது. அதன் பிறகு ஆறு மாதங்கள் கழித்து விடுதலையானார். 1914 ஆம் ஆண்டு சுதந்திர போராட்டத்தில் தன்னை முழுவதும் அர்பணித்துக் கொள்ள படித்து பெற்ற வழக்கறிஞர் பணியை துறந்தார். சுரேந்திரநாத் பானர்ஜி, அரவிந்தகோஷ் ஆகியோருடன் இணைந்து சுதேசி இயக்கத்துக்காக தீவிரமாகப் போராடினார். டிரபியுன் போன்ற பத்திரிக்கைகளில் பங்களிப்பாளராகவும் இருந்தார்.

1914-ல் இரண்டாவது முறையாக இங்கிலாந்து சென்றார். முதல் உலக போர் தொடங்கி விட்டதால், இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பாமல், பிரான்சு, ஜெர்மனி, அமெரிக்கா முதலிய நாடுகளுக்குச் சென்றார். அந்த நாடுகளில் ஆறு ஆண்டுகள் தங்கி இந்தியாவின் நிலையை அங்கு சொற்பொழிவின் மூலமாக வெளிப்படுத்தினார். அமெரிக்காவில் இருந்த போது லாலா லஜபதி ராய் அங்கு இந்தியன் ஹோம் ரூல் லீகையும் (Indian Home Rule League), யங் இந்தியா என்ற மாத பத்திரிக்கையையும் நிறுவினார்.பின்பு இந்தியா திரும்பிய ராய், காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டதால் பஞ்சாபில் ஒத்துழையாமை இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தினார். இதற்காக 18 மாத சிறைத் தண்டனையைப் பெற்றார்.

சைமன் குழு..

1928 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு, இந்தியாவின் அரசியல் சூழலை அறிய சைமன் என்பவரது தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. ஆனால் அந்த குழுவில் ஒரு இந்தியர் கூட இல்லை. எனவே மக்கள் அக்குழுவை எதிர்த்தனர். அந்த குழு அக்டோபர் 30 ஆம் தேதி லாகூருக்கு வந்த போது லாலா லஜபதி ராய், அவர்களுக்கு எதிராக அகிம்சை வழியில் கண்டனப் போராட்டம்
நடத்தினார். அதனால் ஆங்கிலேய காவல் மேலதிகாரி ஜேம்ஸ் ஏ ஸ்காட் காவலர்களை தடியடி நடத்த ஆணையிட்டதோடு மட்டுமல்லாமல் அவரே லாலா லஜபதி ராயை தாக்கினார். அப்போது “இன்று என் மேல் விழும் ஒவ்வொரு அடியும், ஆங்கிலேய அரசின் சவப்பெட்டிக்கு அடிக்கப்படும் ஆணிகள்” என்று கூறினார்.தாக்கப்பட்டதால் லாலா லஜபதி ராய்க்கு படுகாயங்கள் ஏற்பட்டன.

இறப்பு..

நோய் வாய்ப்பட்ட நிலையில் இருந்த லாலா லஜபதி ராய் அதே 1928 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதி மாரடைப்பால் உயிர் நீத்தார். மருத்துவர்கள் அவர் தாக்கப்பட்டது தான் அவரது இறப்பிற்கு முக்கிய காரணம் என்று கூறிய போதும் ஆங்கிலேய அரசு அதனை முற்றிலுமாக மறுத்து விட்டது.

நலப்பணிகள்..

லாலா லஜபதி ராய் அவர்கள் சாதி வேறுபாடு, தீண்டாமை ஆகிய கொடுமைகளைச் சாடினார். குழந்தை திருமணத்தைக் கண்டித்தார். விதவைகளின் மறுமணத்தை ஆதரித்தார். ஆர்ய சமாஜ், யங் இந்தியா, அன்ஹேப்பி இந்தியா போன்ற நூல்களையும் எழுதினார். காசநோயால் பாதிக்கப்பட்டு இறந்த அவரது தாயின் நினைவாக, பெண்களுக்கான காசநோய் மருத்துவமனை ஒன்றை நடத்த எண்ணினார். 1927 ஆம் ஆண்டு அதற்காக ஒரு அறக்கட்டளையை நிறுவினார். 1937 ஆம் ஆண்டு இந்த மருத்துவமனை திறக்கப்பட்டது. மேலும் பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் லட்சுமி காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றையும் நிறுவினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here