இத பண்ணிப்பாருங்க

0
57

தீபாவளி ஸ்பெஷல் !

`தீபலட்சுமியே நமோ நம:’

தீபத்தில் பல வகைகள் உண்டு. தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் `தீபலட்சுமியே நமோ நம’ என்று கூறி வணங்குவது அவசியம் .

தீபத்தில் பல வகைகள் உண்டு.

சித்திர தீபம்: தரையில் வண்ணப் பொடிகளால் வண்ணக் கோலம் இட்டு, அதன்மீது ஏற்றப்படும் தீபங்கள்.

மாலா தீபம்: அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படுவது.

ஆகாச தீபம்: வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றி வைக்கப்படுவது, ஆகாச தீபம். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதிநாளில் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால், யம பயம் நீங்கும் என்பது ஐதீகம்.

ஜல தீபம்: நதி நீரில் மிதக்கவிடப்படும் தீபங்கள் ஜல தீபம் எனப்படும்.

நௌகா (படகு) தீபம்: கங்கைக் கரையோரங்களில் வாழும் மக்கள், புண்ணிய யாத்திரையாக கங்கை தீரத்துக்குச் செல்பவர்கள், கங்கை நதியில் மாலை வேளையில் ஆரத்தியெடுத்து வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றிவைத்து, அதை கங்கையில் மிதக்க விடு வார்கள். படகு போன்ற வடிவங்களில் தீபங்களைத் தயாரித்தும் மிதக்க விடுவார்கள். இவற்றையே நெளகா தீபங்கள் என்று அழைப்பார்கள். சம்ஸ்கிருத த்தில் `நௌகா’ என்றால் `படகு’ என்று அர்த்தம்.

சர்வ தீபம்: வீட்டின் அனைத்து பாகங்களிலும் வரிசையாக ஏற்றிவைக்கப்படுபவை சர்வ தீபம்.

மோட்ச தீபம்: முன்னோர் நற்கதியடையும் அவர்களின் ஆத்மா அமைதியாகும் பொருட்டு, ஆலய கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படுகிறது.

சர்வாலய தீபம்: கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று, மாலை வேளையில் சிவாலயங்களில் ஏற்றப்படுவது சர்வாலய தீபம். அதாவது, பனை ஓலைகளால் கூடுபோல் பெரிதாகச் செய்து, அதற்கு பூஜை செய்து தீபமேற்றுவார்கள். அதில் கற்பூரத்தை வைத்து தீபமேற்றுவது வழக்கம்.

அகண்ட தீபம்: மலையுச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது அகண்ட தீபம். திருவண்ணாமலை, பழநி, திருப்பரங்குன்றம் முதலான திருத்தலங்களில், அகண்ட தீபத்தைத் தரிசிக்கலாம்.

லட்ச தீபம்: ஒரு லட்சம் விளக்குகளால் ஆலயத்தை அலங்கரிப்பது லட்சதீபம். திருமயிலை, திருக்கழுக்குன்றம் (12 ஆண்டுகளுக்கு ஒருமுறை) முதலான பல ஆலயங்களில் லட்சதீபம் ஏற்றுவது வழக்கம்.

மாவிளக்கு தீபம்: அம்மன் ஆலயங்களில் நோய் தீர வேண்டிக்கொண்டு மாவிளக்கு ஏற்றுவார்கள். அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி, நடுவில் குழித்துவைத்து, நெய்யூற்றி திரியிட்டு ஏற்றுவது மாவிளக்கு தீபம்.

காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேஸ்வரர் ஆலயத்தில், கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில், இந்த வகை தீபத்தை தலையில் வைத்துக்கொண்டு ஆலயத்தை வலம் வந்து வழிபடும் வழக்கம் உண்டு. இதை, ’மண்டை விளக்கு பிரார்த்தனை’ என்றும் சொல்லுவார்கள்.

விருட்ச தீபம்: ஒரு மரத்தைப்போன்று கிளைகளுடன் அடுக்கடுக்காக அமைக்கப் படும் தீப ஸ்தம்பங்களில் விளக்கேற்றும்போது, விருட்சத்தைப் போன்று காட்சித் தரும் தீபம் இது. சிதம்பரம், திருவண்ணாமலை, குருவாயூர் ஆலயங்களில் விருட்ச தீபத்தை ஏற்றி வழிபடுவார்கள்.

தீபமேற்றி வழிபடுவோம். ஒளிமயமான எதிர்காலம் நமக்கும் நம் சந்ததிக்கும் நிச்சயம் உண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here